சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கை குறித்த மற்றொரு படத்தின் இரண்டாவது முன்னோட்டம் ( ட்ரெயிலர்) நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளதாக அந்தப் படத்தின் இயக்குநர் ராம் கோபால் வர்மா அறிவித்திருக்கிறார்.
இந்த அக்டோபர் 18ம் தேதிதான் கடந்த 2004ம் ஆண்டு வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலிஸ் உறுதி செய்தது. இந்த தேதியைப் பயன்படுத்தி, நேற்று ஞாயிற்றுகிழமை வீரப்பனின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை அந்த திரைப்படத்தின் இயக்குனரான ராம் கோபால் வர்மா தனது சமுக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
ராஜ்குமாரின் மகன் நடிக்கிறார்
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மட்டுமே நேற்று இரவு இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இது ஹிந்தி மொழியிலும் உருவாக்கப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் இந்த திரைப்படம், குறிப்பாக காவல்துறையினரின் தேடுதல் வேட்டையை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது.
வீரப்பனால் கடத்தப்பட்ட மறைந்த கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரின் வாரிசான "சிவா ராஜ்குமார்" இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாலும், ராம் கோபால் வர்மா இயக்கும் முதல் கன்னட மொழி திரைப்படம் இது என்பதாலும், திரை ரசிகர்களின் கவனத்தை இந்த திரைப்படம் ஈர்த்துள்ளது.
கிரைம், த்ரில்லர் மற்றும் திகிலூட்டும் திரைப்படங்களையே பெரும்பாலும் இயக்கியுள்ள ராம் கோபால் வர்மா தேசிய விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ள திரைப்பட இயக்குனர். கடந்த 2007 ஆம் ஆண்டில் ராம் கோபால் வர்மா இயக்கி தயாரித்த ஹிந்தி மொழி திரைப்படமான "ஆக்" என்பது, "ஷோலே" திரைப்படத்தின் தழுவல் என்பதால் அது பிரத்தியேக பதிப்புரிமை விதிமீறல் என கூறிய டில்லி உயர்நீதிமன்றம், அவருக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதியன்று, நடிகர் ராஜ்குமாரின் பிறந்த தினத்தில் துவக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி சமயத்தில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது படம்
கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிய "வனயுத்தம்" என்கிற வீரப்பனின் கதையை மையமாக கொண்ட திரைப்படம் கூட பல்வேறு தடைகளை கடந்த பின்பு தான் திரையிடப்பட்டது. தமிழ் அமைப்புகள் இந்த திரைப்படத்திற்கு கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தார்கள்.
குறிப்பாக நீதிமன்றத்திற்கு சென்ற வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிக்கு, ரூபாய் 25 லட்சம் செலுத்த வேண்டுமென இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் "வனயுத்தம்" படம் வெளியாக தடை விதிக்க வேண்டும் என முத்துலட்சுமி வழக்கு தொடுத்திருந்தார். தன்னிடமோ, அல்லது எனது மகளிடமோ அனுமதி பெறாமல், வீரப்பனின் கதையை திரைப்படமாக உருவாக்கியது தவறு என கூறியிருந்த முத்துலட்சுமி, இந்த திரைப்படம் வெளியானால் அது வீரப்பன் மீது தவறான கண்ணோட்டத்தை உண்டாக்கிவிடும் என்றார். கடைசி நேரத்தில் "வனயுத்தம்" திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பு மற்றும் முத்துலட்சுமி தரப்பு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில், முத்துலட்சுமிக்கு 25 லட்சத்தை செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் "கில்லிங் வீரப்பன்" திரைப்படம் வெளியாக தயார் நிலை பெற்று வரும் சூழலில் இதற்கும் ஒரு சில தடைகள் உண்டாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
