இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணமும், சீரற்ற காலநிலை காரணமாக இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு நகரிலுள்ள பெளத்த வழிபாட்டுத் தலமொன்றில் நடக்கவிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி அங்கு செல்லவிருந்தார்.
கன மழை தொடர்ந்தும் நீடிப்பதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
கிரான் - தொப்பிக்கலை வீதி உட்பட சில வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அவ்வீதிகள் வழியாக தரைவழிப் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக கிரான் - தொப்பிக்கலை வீதியில் இராணுவத்தினரும் பிரதேச செயலகத்தினரும் சேர்ந்து படகு வழிப் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள நெல் வேளாண்மை நீரில் மூழ்கியுள்ள நிலையில் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
