இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ஒரு பெண்ணை தொடர்புபடுத்தி தவறான தகவலொன்றை பிரசுரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட தென் மாகாண சபையின் பிரதித் தலைவர் சம்பத் அத்துகொரலவை வரும் ஐந்தாம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது, எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளராக செயல்பட்ட மைத்திரிபால சிறிசேனவுடன் ஒரு பெண்ணை தொடர்புபடுத்தி தவறான விளம்பரமொன்றை இரண்டு பேஸ்புக் பக்கங்களில் பிரசுரித்தது தொடர்பாக சம்பத் அத்துகொரல கைதுசெய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட விளம்பரத்தை இந்த சந்தேக நபரே இணைய தளத்தில் பிரசுரித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் உர்ஜிதப்படுத்தியுள்ளதாக கூறிய காவல்துறையினர், அவரை பிணையின் கீழ் விடுதலை செய்யப்பட்டால் அதன் முலம் விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுமென்றும் எச்சரித்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த எதிர்த்தரப்பு வழக்கறிஞர் அஜித் பிரசன்னா இது ஒரு அரசியல் பழிவாங்கலென்று குற்றம் சாட்டினார்.
குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சம்பத் அத்துகொரல முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் நெருங்கிய ஆதரவாளரென்று கூறிய வழக்கறிஞர் அஜித் பிரசன்னா, முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அரசியலில் ஈடுபடுமாறு பலத்த அழுத்தங்களை கொடுத்துவந்தவரென்றும் கூறினார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்காக அவர் பாடுபட்டதாகவும் அவரைப் பழிவாங்குவதற்காகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் சம்பத் அத்துகொரலவின் வழக்கறிஞர் கூறினார்.
