இவ்வார இறுதிவரை அரசுக்குக் காலக்கெடு
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து இந்த வார இறுதி வரை அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளோம். அதன் பின்னர் நாம் மக்களை அணி திரட்டி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுப்போம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச் சாலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அஸ்மின், சயந்தன் ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டனர். இது தொடர்பில் உதயன் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
தமிழ் அரசியல் கைதிகள் பல்வேறு விடயங்களை எங்களுக்குச் சுட்டிக்காட்டினர். தமக்கு எதிராக வழக்கு நடத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் கூட அதற்கு வழங்கப்படும் தண்டனை காலத்தை விடக் கூடுதலான காலம் சிறையில் நாம் கழித்து விட்டோம் என்று தெரிவித்தனர். அவர்களின் கருத்து நியாயமானது.
அவர்களை இனியும் தொடர்ந்து சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதை ஒரு போதும் நியாயப்படுத்த முடியாது. இந்த அரசுக்கு கடந்த ஜனவரி மாதமே இந்த விடயத்தை தெரியப்படுத்தியிருந்தோம். நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இதுவரை எதுவும் இடம்பெறவில்லை. அரசிடமிருந்து எங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கவில்லை. இவ்வாறான நிலையில் அரசியல் கைதிகளுக்கு நாம் எந்த வாக்குறுதியும் கொடுக்க முடியாது.
இந்த வார இறுதி வரையில் அரசுக்கு காலக்கெடு வழங்கியுள்ளோம். அதன் பின்னர் நாம், மக்களை அணி திரட்டி, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுப்போம். இதேவேளை, அரசியல் கைதிகள் தமது விடுதலை தொடர்பில் பிரதமருடன் என்னைப் பேசுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதற்கமைய நான் பிரதமருடன் கைத்தொலைபேசியில் பேசினேன். அதற்குப் பிரதமர், சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து அறிக்கை கோரியதாகவும், பல மாதங்களாகியும் அந்த அறிக்கை கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் சட்டமா அதிபருக்கு யார் மீதாவது உடன்பாடு இல்லையா என்பதைத் தருமாறு கேட்டிருந்தேன். அது தனக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று பிரதமர் தெரிவித்தார்.
உடனடியாகவே நான், அவ்வாறு செய்யவேண்டாம். சகல கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். தான் பார்ப்பதாகப் பிரதமர் கூறினார் என்றார் சுமந்திரன்.
