எகிப்தில் நேற்று சனிக்கிழமை ரஷ்ய விமானம் விழுந்துநொறுங்கிய இடத்திற்கு ரஷ்யாவின் போக்குவரத்து மற்றும் அவசரகால சேவைகளுக்கான அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
இந்த விமானத்தில் பயணித்த 224 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது.
விமானம் விழுந்து நொறுங்கியமைக்கான காரணம் பற்றி ஆராய்ந்துகொண்டிருக்கும் எகிப்திய குழுக்களுக்கு உதவுவதற்காக ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் தலைவரும் அங்கு சென்றுள்ளார்.
இதுவரையில் 175 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மற்றவர்களின் சடலங்களை கண்டுபிடிப்பதற்காக சைனாய் தீபகற்பத்தின் பரந்துபட்ட பிரதேசமெங்கிலும் தேடுதல் நடந்துவருகின்றது.
பலியானவர்களுக்காக ரஷ்யா எங்கிலும் ஒருநாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
தாங்களே அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவினர் உரிமை கோரியிருந்த நிலையில், ரஷ்யாவும் எகிப்தும் அதனை நிராகரித்துள்ளன.
தொழில்நுட்க் கோளாறு காரணமாகவே விமானம் விழுந்திருக்கக்கூடும் என்று இருநாட்டு அதிகாரிகளும் நம்புகின்றனர்.
