எதிர்க்கட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் மஹிந்த அணி
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், எதிர்க்கட்சித் தலைவராக அதன் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியும் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய உத்தியோகபூர்வமாக செயற்பட்டுவரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைமைப் பதவி தமக்கே வேண்டும் என மஹிந்த ஆதரவு அணி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் கோரிவரும் மஹிந்த ஆதரவு அணி, இந்த விடயத்தில் சபாநாயகர் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய சகாவும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடாளுமன்றத்தில் நாம் 48 பேர் இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஜே.வி.பியும் இணைந்து 22 பேர் தான் இருக்கின்றனர். இதனை சபாநாயகரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளோம்.ஆனால், சபாநாயகரான கரு ஜயசூரிய யதார்த்தத்தைப் புரிந்து செயற்படுகின்றாரில்லை. இது நாடாளுமன்றத்தின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் பின்பற்றப்படவேண்டும். மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளிக்கவேண்டும். இந்த நிலைமையை மாற்றவேண்டும். இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என சபாநாயகரிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்" - என்றார்.
