|
புனித மஸ்ஜிதுல் அக்ஸா மீதான இஸ்ரேலிய மதக் கடும்போக்காளர்களின் அத்துமீறல்கள் அதிகரித்துச் செல்கின்றன. குறிப்பாக, மஸ்ஜிதுல் அக்ஸாவை நேர மற்றும் இட அடிப்படையில் யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் பிரிக்க வேண்டும் என்பதே இதற்கான பிரதான காரணமாகும். இதனை தடுத்து நிறுத்தும் நோக்குடனேயே பலஸ்தீன மக்கள் நீண்ட கத்திப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
ஒரு மாத காலமாகத் தொடரும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இஸ்ரேலிய அரசியலில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன? இம்மக்கள் போராட்டம் வெற்றியளிக்குமா, இடைநடுவில் பலஸ்தீன அரசியல் தலைவர்களால் ஹைஜேக்ட் செய்யப்படுமா அல்லது யூதர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் அல்அக்ஸா பிரிக்கப்படும் சூழமைவுகள் காணப்படுகின்றனவா? என்பன போன்ற அரசியலுடன் தொடர்புபட்ட நடைமுறைக் கேள்விகள் ஒரு புறமிருக்க, மஸ்ஜிதுல் அக்ஸா மீது தொடரும் ஸியோனிஸ அத்துமீறலுடன் தொடர்புபட்ட வேறு சில உள்முகங்களை அரசியல் ஆய்வாளர்கள் அடையாளப்படுத்திக் காட்டுகின்றனர்.
ஸியோனிஸத்திற்கும் யூத மதத்திற்கும் இடையில் அடிப்படையில் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஸியோனிஸம் என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட மதச்சார்பற்ற காலனித்துவ செயற்திட்டமாகும். கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களின் விளைவாகவே ஸியோனிஸம் உருவாக்கப்பட்டது. மட்டுமன்றி, வளர்ந்து செல்லும் ஐரோப்பாவின் பொருளாதார அரசியல் ஏகாதிபத்திய நலன்களுக்கு துணை செய்யும் ஆழமான நோக்குடனேயே ஸியோனிஸ செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டது என்றும் கூறலாம்.
இதனை எந்தளவுக்கு ஐரோப்பா புரிந்து வைத்திருக்கிறதோ, அதனை விட ஸியோனிஸ அரசை உருவாக்குதவற்கு துணை செய்த யூத சிந்தனையாளர்களான தியேட்டர் ஹர்ஸல், டேவிட் பென் கூறியன் போன்றவர்கள் அறிந்து வைத்திருந்தனர். ஆனால், ஸியோனிஸம் தனது இலக்கான இஸ்ரேலிய அரசை நிறுவிய நாள் முதல், மதம் என்ற காரணி பலமாக செல்வாக்குச் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதன் உச்சகட்டமே இன்று அல்அக்ஸாவை பங்கு போட வேண்டும் என்ற தீவிர மதவாதிகளின் கோரிக்கையாகும். 1967 முதல் மத ரீதியான நியாயத்தை எல்லா ஸியோனிஸ அரசாங்கங்களும் பயன்படுத்தி வருகின்றன. அதாவது, மஸ்ஜிதுல் அக்ஸா மற்றும் அதனை சுற்றியுள்ள பைதுல் மக்திஸ் பரப்பின் முழு உரிமைகளும் ஸியோனிஸ அரசில் வாழ்கின்ற யூதர்களுக்கே உரியன. அதனை யூதர்கள் முடியுமானவரை அத்துமீறி கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற விடயத்தை இஸ்ரேலிய அரசாங்கங்கள் தொடர்ச்சியாக பேசி வருகின்றன.
உண்மையில், மதப் பற்றின் காரணமாகவோ அல்லது யூத மக்களினுடைய மத உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவோ இத்தகைய பிரசாரங்கள் முடுக்கி விடப்படவில்லை. மாறாக, மூன்று மிக ஆழமான சமூக உளவியல் மற்றும் வரலாற்றுக் காரணிகளை மையப்படுத்தியே இந்த மதக் காரணியை இஸ்ரேலிய அரசு பயன்படுத்துகின்றது. முதலாவது, இன்றும் சர்வதேச ரீதியில் பல நாடுகளில் சிதறி வாழும் யூதர்களை முழுமையாக இஸ்ரேல் உள்ளீர்க்கவில்லை.
அவ்வாறு உள்ளீர்ப்பதில் ஏற்படும் குறைவான வேகம் ஸியோனிஸ செயற்திட்டத்திற்கு பிரதான சவாலாகும். ஏனெனில், தொடர்ச்சியான மக்கள் அதிகரிப்பு என்பது இஸ்ரேலிய ஸியோனிஸ தேசத்தினுடைய இருப்புடன் தொடர்புபட்ட விவகாரமாகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட உலக மயமாக்கல் மற்றும் ஜனநாயக மயமாக்கல் போன்ற நியாயங்களின் அடிப்படையில், இஸ்ரேலுக்கு வெளியே இருப்பதை யூதர்கள் அதிகம் விரும்பும் நிலை காணப்படுகின்றது.
அதனை விட, யூத இளைஞர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மதச்சார்பற்ற மனோநிலையும் ஸியோனிஸ தேசத்திற்கான வருகையை பாதித்துள்ளது. இந்தப் பின்புலத்தில், யூதர்களுக்கு மத்தியில் ஆன்மிக எழுச்சி தேவை என்ற தொனிப்பொருளில் ஸியோனிஸ ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கூடாக, யூதர்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய தேசத்திற்கு வருவதன் ஆன்மிகப் பெறுமானங்கள் பற்றி விழிப்புணர்வூட்டப்படுகின்றன.
மஸ்ஜிதுல் அக்ஸா மீதான அத்துமீறல்கள், அதில் யூத வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வேண்டி மேற்கொள்ளப்படும் அரசியல் பிரயத்தனங்கள் என்பவற்றின் பின்புலத்தில் ஸியோனிஸத்தின் இப்பரந்த இலக்கை பிரித்து நோக்க முடியாது. அடுத்து, இஸ்ரேல்-பலஸ்தீன் பிரச்சினையின் மூலம் முழுமையான ஸியோனிஸ ஆக்கிரமிப்பு (Total occupation) என்ற தோற்றப்பாட்டிலிருந்து விடுவித்து,
இரு சமூகங்களுக்கிடையிலான கிளை விவகாரங்கள் (Compartmentalizing the problem) மட்டுமே பிரச்சினையை தோற்றுவித்துள்ளன என்ற கருத்தை உருவாக்குவதற்கும் ஸியோனிஸ அரசு மதத்தை கருவியாகப் பயன்படுத்துகின்றது. குறிப்பாக, வடக்கு இஸ்ரேலிய நகரான ஹைபா முதல் தெற்கு இஸ்ரேலிய நகரான அஸ்கலான் வரையான 50 வருட ஸியோனிஸ ஆக்கிரமிப்பு பலஸ்தீனப் பிரச்சினையின் அடிப்படையல்ல.
மாறாக, ஜெரூஸலத்தில் அமைந்துள்ள சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் உரிமை யாருக்குரியது என்ற பிரச்சினையே இரு சமூகங்களுக்கிடையிலான முறுகல் நிலைக்கான காரணமாகும் என்ற மக்களின் பொது அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவது ஸியோனிஸத்தின் அக்ஸா மீதான அத்துமீறல்களுக்கான மற்றோரு காரணமாகும். இதற்கூடாக “we are same as other nations” என்ற கருத்தை ஆழமாக பதியவைக்க முயற்சி செய்தல்.
அதாவது, எல்லா நாட்டிலும் வரலாற்று மரபுரிமைகளுடன் தொடர்புட்ட இனங்களுக்கிடையிலான மோதல்கள் காணப்படுகின்றன. அதுபோன்றே இஸ்ரேலிய-பலஸ்தீன விவகாரமும் கருதப்பட வேண்டும் என்பதினூடாக சர்வதேசத்தை திருப்திப்படுத்த ஸியோனிஸம் அதீத முயற்சி செய்கிறது. கடந்த சில தாசாப்தங்களாக பலஸ்தீனர்களின் அதிகார பரப்பெல்லையை கட்டுப்படுத்துவதினூடாக அவர்களை சிறுமைப்படுத்தலாம் என ஸியோனிஸம் சிந்தித்து வந்திருக்கிறது.
இதற்காகவே மேற்குக் கரை, காஸா மீதான தாக்குதல்கள் மற்றும் பலஸ்தீன அதிகார சபையை குட்டிச் சுவராக்குதல் போன்ற செயற்பாடுகளை இஸ்ரேலிய அரசு மேற்கொண்டது. என்றாலும், இறுதி வரை அவர்களால் பலஸ்தீன சிவில் சமூகத்தை அடக்க முடியவில்லை. விளைவாக ஸியோனிஸ சிந்தனையாளர்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்துள்ளனர். அதுவே, பலஸ்தீன மக்களின் அதிகாரம், இனப் பரம்பல் மற்றும் பண உட்பாய்ச்சல் போன்ற கட்டுப்பாட்டுக் கருவிகளைப் பயன்படுத்தி அவற்றால் மாத்திரம் ஸியோனிஸத்தை நிலைநாட்ட முடியாது.
மாறாக, பலஸ்தீனர்களினுடைய அடையாளத்தின் மீதே கை வைக்க வேண்டும். அதுவரை ஸியோனிஸத்திற்கு பலஸ்தீன நிலத்தில் பாதுகாப்பில்லை என்பதாகும். அதாவது, அல்அக்ஸாவும் அகன்ற பைதுல் மக்திஸ் பரப்பும் பலஸ்தீன முஸ்லிம்களின் மத ரீதியான மையம் என்பதை விட, பலஸ்தீன தேசியத்திற்கான அடையாளமாகவும் (National identity) நோக்கப்படுகின்றன என்பது ஸியோனிஸத்தின் புரிதலாகும்.
எனவே, இதற்கான வாய்ப்பை நீண்ட நாட்களாக ஸியோனிஸ செயற்திட்ட கொள்கை வகுப்பாளர்கள் இலக்கு வைத்திருந்தனர் பல முறை முயற்சி செய்துள்ளனர். ஆனால், இன்று முழு மத்திய கிழக்கிலும் காணப்படும் போர்ச் சூழல் மற்றும் அங்கு உள்நாட்டு யுத்தங்களும் நிலவுவதால், குறித்த பலஸ்தீனர்களது அடையாளத்தைத் தாக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியுள்ளனர். இதனையே பலஸ்தீன ஜிஹாத் அமைப்பின் தலைவர் ராஇத் ஸலாஹ் எமது கட்டடங்களைத் தாக்கி சலித்துப் போன ஸியோனிஸம் எமது தனித்துவத்தின் மீது போரை ஆரம்பித்திருக்கிறது எனக் குறிப்பிடுகிறார்.
இத்தகைய மூன்று முக்கியமான சமூக, அரசியல் மற்றும் உளவியல் காரணிகள் அக்ஸா மீதான மதச்சார்பற்ற ஸியோனிஸத்தின் அத்துமீறல்களின் பின்னால் தொழிற்படுகின்றன. பலஸ்தீனத்தை மையப்படுத்திய சர்வதேச முஸ்லிம் உம்மாவின் போராட்டம் ஸியோனிஸத்தின் இவ்விலக்குகளை மிகச் சரியாக புரிந்த நிலையில் அமைய வேண்டும்.
இந்த வகையில், அக்ஸாவை விடுதலை செய்வதற்கான போராட்டம் என குறுகிய வட்டத்தில் பலஸ்தீன விவகாரத்தை நோக்குவதை முஸ்லிம் உம்மா தவிர்ந்து கொள்ள வேண்டும். மாறாக, அகன்ற பலஸ்தீன் முழு நிலத்தையும் மீட்பதற்கான போராட்டம் என்ற சிந்தனையை வலிமைப்படுத்துவது அத்தியாவசியமாகும். இன்னும், அக்ஸாவை வெறும் மத அடையாளம் என்ற பார்வைக்கும் அப்பால் நின்று, அதனை பலஸ்தீனர்களின் தேசிய அடையாளமாக வெளிச்சமிட்டுக் காட்டுவது இன்றியமையாததாகும்.
மதச்சார்பற்ற, இஸ்லாமிய, லிபரலிஸ மற்றும் கம்யூனிஸ சிந்தனை முகாம்களைச் சேர்ந்த பலஸ்தீனர்கள் அனைவரினதும் தேசிய அடையாளமாக பைதுல் மக்திஸை அறிமுகப்படுத்தல் வேண்டும்.அதேபோல், சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் நவீன காலனித்துவமாக இஸ்ரேலை நோக்கி யூதர்கள் அழைத்து வரப்படுவதற்கான ஸியோனிஸத்தின் ஆன்மிக மதப் பிரசாரங்களை விளம்பரப்படுத்தல் அவசியமாகும். மதப் பிரசாரம் ஸியோனிஸத்தின் காலனியக் கருவி என்ற விடயம் அழுத்தமாக முன்வைக்கப்பட வேண்டும்.
மேற்கூறப்பட்ட கூறுகளை மையப்படுத்திய கருத்தியல் போராட்டத்தை சர்வதேச மயப்படுத்துவது, பலஸ்தீன விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுக்கு பெரிதும் துணை செய்யலாம். அக்ஸாவை விடுதலை செய்வதற்கான போராட்டம் என குறுகிய வட்டத்தில் பலஸ்தீன விவகாரத்தை நோக்குவதை முஸ்லிம் உம்மா தவிர்ந்து கொள்ள வேண்டும். மாறாக, அகன்ற பலஸ்தீன் முழு நிலத்தையும் மீட்பதற்கான போராட்டம் என்ற சிந்தனையை வலிமைப்படுத்துவது அத்தியாவசியமாகும்.
|
Wednesday, 11 November 2015
![]() |
பலஸ்தீன் அகன்ற முழு நிலத்தையும் மீட்பதற்கான போராட்டம் |
Loading...
