நேபாளத்தில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கும் இலங்கையர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் மீது அந்நாட்டு காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அரச உதவிகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் காட்மாண்டுவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அலுவலத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான அரசியல் தஞ்சக்கோரிக்கையாளர்கள், 16 நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் என அங்கு தஞ்சம் கோரியிருக்கும் இலங்கையரான சுரேஷ்குமார டயஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
திடீரென அங்கு அழைக்கப்பட்ட காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைந்துச் செல்லும்படி கூறினர் எனவும், அதையடுத்து தாக்குதல் நடத்தினர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் இலங்கை அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்கள் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என்றுக் கூறிய அவர், நேபாளத்தில் 15 முதல் 25 வரையிலான இலங்கையர்கள் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
