பொய்க்குற்றச்சாட்டே மீள்குடியேற்றத்துக்குத் தடை
பொய்யான குற்றச்சாட்டுக்களே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடைசெய்து வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,வில்பத்து பகுதியில் வன பாதுகாப்பு பகுதிக்குள் முஸ்லிம்கள் பலாத்காரமாக குடியேறவில்லை. காட்டுப் பகுதியை அழிக்கவும் இல்லை. சூழலியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு இனவாதமாகவும் மதவாதமாகவும் பொய்யான குற்றச்சாட்டை செய்து வருகிறார்கள்.
முசலி மருச்சுக்கட்டி, கரடிக்குளி என்பது வன பாதுகாப்பு பகுதி அல்ல. அங்குமுஸ்லிம்கள் ஏற்கனவே குடியிருந்த பகுதிகள். 1905ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல்களும் உள்ளன. குடிமனைகளும் உள்ளன.
இது விடயத்தில் விசேட ஆணைக் குழுவொன்றை நியமித்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியை நான் கேட்டுக்கொள்கிறேன்.இதற்கு சூழலியலாளர்கள் எனக் கூறிக்கொண்டு சில நயவஞ்சகக் கூட்டம் எனக்கு எதிராக செயற்படுகிறது.மகிந்த அரசிலிருந்து நான் என்று வெளியேறினேனோ அன்றிலிருந்து எனக்கெதிராக இவ்வாறான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
மேலும்,இந்தப் பிரச்சினையால் 70 வீதமான மக்கள் மீளக்குடியேறாமல் புத்தளத்துக்கு திரும்பி வந்துவிட்டனர் என்றும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார்
