- கமெலியா நாதானியேல்
அரசாங்கம் தனது ஒவ்வொரு வாய்ப்பையும் தனக்கு எதிரான அல்லது முந்தை
ய ஆட்சிக்கு ஆதரவளிக்கும் எவரையும் இலக்கு வைப்பதற்கே பயன்படுத்துகிறது, என்று இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (யு.பி.எப்.ஏ) பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர்கள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணையும்படி வசீகரிக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் இதுவரை எதிர்க்;;கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதில் வெற்றிபெற அவர்களால் முடியவில்லை. எனினும் அவர்களில் சிலர் அரசாங்கத்தின் பிரஸ்தாபங்களில் மயங்கி கட்சி மாறினாலும் தான் ஆச்சரியம் அடையப் போவதில்லை என்று நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வரவு செலவு திட்டம் பற்றி சண்டே லீடருடனான ஒரு நேர்காணலில், அவர் தெரிவித்தது, பாதீட்டின் மூன்றாவது வாசிப்பின் போது பல முன்மொழிவுகள் பெரிதும் நீர்த்து போகச் செய்யப்பட்டு அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று. அவர் மேலும் தெரிவிக்கையில் அரசாங்கம் நாட்டுக்கு நிதியை கொண்டுவருவதற்காக வெளிநாட்டு முதலீடுகளில்தான் பெரிதும் தங்கியுள்ளது, ஆனால் இந்த முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்காக சேர்க்கப்பட்டுள்ள சலுகைகளில் உரிய கவனம் செலுத்தப்படாமல் மேற்கொள்ளப் பட்டுள்ளது. காலப்போக்கில் அவை நாட்டுக்கு எதிர்மறையான தாக்கங்களை உருவாக்கலாம் என்று சொன்னார்.
அந்த நேர்காணலின் சில பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:-
- கேள்வி: மோதல் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் ஆயுதப்படைகளுக்கு எதிராக எழுப்பப் பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வெளிப்படையான வகையில கையாள வேண்டும் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது. போரைப்பற்றி விசாரணை நடத்துவது இராணுவத்தை ஆபத்தில் தள்ளி விடாதா?
பதில்: இதைச் செய்வதற்கு அரசாங்கத்துக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை, மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒரு பொதுசன வாக்கெடுப்பும் அதற்குத் தேவைப்படும். ஆகவே இது அரசாங்கம் தனது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் செய்யக்கூடிய ஒரு விடயம் அல்ல.
- கேள்வி: பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது, ஆகவே ஏனைய முன்னாள் இராணுவ உயர்மட்ட அதிகாரிகளும் கூட மனித உரிமைகள் துஷ்பிரயோகம் தொடர்பாக சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுடன் இணைந்த கெடுபிடிகளுக்கு முகம் கொடுக்க நேருமா?
பதில்: பொன்சேகாவுக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வரிசையில் இனிமேல் அவர் இருக்கமாட்டார். கடந்த முறை அவர் ஐதேக வில் இருந்து அவர்களுக்கு பிற்பாட்டு பாடி வந்ததால் அவருக்கு விசா வழங்கப் பட்டது. அரசாங்கம் அவர்களுக்கு எதிராக உள்ள எவரது கழுத்தையும் நசிக்க முயலுகிறது மற்றும் இது பொன்சேகா எதிர்கொள்ள நேர்ந்த அப்படியான ஒரு உதாரணம். மற்றது நிதி மோசடிக் குற்றப் பிரிவு, முன்னாள் அரசாங்கத்துக்கு விசுவாசமாக இருந்தவர்கள் அல்லது தற்போதைய அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் ஆகியோரை இலக்கு வைத்துச் செயற்படுகிறது.
- கேள்வி: மோசடிகள் பற்றி விசாரணை நடத்தக் கூடாது என்றா நீங்கள் சொல்கிறீர்கள்?
பதில்: மோசடிகள் பற்றி விசாரணை நடத்தக்கூடாது என்று நான் சொல்லவில்லை ஆனால் அதை உரிய முறையில் விசாரிக்க வேண்டும். தங்கள் நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதற்காக அவர்கள் ஆட்களை இலக்கு வைக்கக்கூடாது. உண்மை என்னவென்றால் சில குற்றங்கள் தொடர்பாக சிலர் குற்றவாளிகளாக இருக்கக்கூடும் மற்றும் இன்னும் அவர்களை விசாரிக்கத்தான் வேண்டும், ஆனால் இந்தப் பிரிவை பழிவாங்குதலுக்காகப் பயன்படுத்தக் கூடாது. சில சந்தர்ப்பங்களில் இந்த நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறைந்தபட்சம் நியாயமற்றதாக தெரியும் சில குறிப்பிட்ட வழக்குகளைக் கூட பின்தொடர்கிறது, மற்றும் சில உதாரணங்களைப் பொறுத்தவரை இந்தப் பிரிவு தங்கள் அதிகாரத்தை மீறிச் செயற்படுவதாக நான் நினைக்கிறேன். இந்த வழக்குகளில் சில சிவில் சொத்துடமையின் கீழ் வருகின்றன இவைகளை சிவில் நீதிமன்றங்களில்தான் விசாரிக்க வேண்டும் அவற்றை குற்றவியல் நீதி மன்றங்களில் விசாரிக்க முடியாது. அதனால்தான் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அரசியல் எதிராளிகளை வேட்டையாடும் ஒரு உபகரணமாக அரசாங்கத்தினால் பயன்படுத்தப் படுவதாக நான் நினைக்கிறேன்.
- கேள்வி: யுத்த வீரர்களை வேட்டையாடுவதாகச் குற்றம் சாட்டப்படுவது மேற்கத்தைய நாடுகளை மகிழ்ச்சிப் படுத்துவதற்காகத்தான் நடத்தப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: நம்பகமான குற்றச்சாட்டுகள் இருக்குமானால் அவைகள் விசாரிக்கப்படுவதை நான் எதிர்க்க மாட்டேன். எனினும் சில அரசியல் நிகழ்ச்சி நிரல்களைப் பூர்த்தி செய்வதற்காக அரசாங்கம் யுத்த வீரர்களைத் தியாகம் செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். சில அரசியல் பழிவாங்கல்களை பூர்த்தியாக்குவதற்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு மாறாக அத்தகைய விசாரணைகள் வெளிப்படையாகவும் மற்றும் நீதியான முறையில் நடத்தப் படுமானால் அப்போது எந்த இராணுவ நபரும் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டால் அவரைத் தண்டிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. எனினும் அப்படிச் சொல்வதினால் இராணுவம் மொத்தமாக இலக்கு வைக்கப்பட்டு திரளான கைதுகள் எதனையும் நடத்தக் கூடாது என்பதனையும் நான் கட்டாயம் சொல்ல வேண்டும். சில தனித்துவமான வழக்குகளில் குறிப்பிட்ட சில இராணுவ உத்தியோகத்தர்கள் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். அதனால் நான் நினைக்கிறேன் எந்த வகையான கொலைகள் மற்றும் காணாமற் போக்கடிக்கப்பட்ட சம்பவங்கள் போன்;றவற்றிற்கு பாதுகாப்புபடை ஆட்கள் உடந்தையாக இருந்திருந்தால், அப்போது இவைகளை விசாரிப்பதற்கு நிச்சயம் சம்மதம் சொல்ல வேண்டும் மற்றும் இவைகள் இராணுவத்தை இலக்கு வைப்பதாக வகைப்படுத்த முடியாது.
- கேள்வி: இப்போது வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பும் கூட முடிவடைந்து விட்டது, இந்த வரவு செலவு திட்டத்தை பற்றிய உங்கள் ஒட்டுமொத்த கருத்து என்ன?
பதில்: இந்த வரவு செலவு திட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக பல சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டன. இப்போது அது கிழிசல்களுக்கு துணிகளால் ஒட்டுபோட்டுத் தைத்த ஒரு ஆடையைப் போலவே உள்ளது. ஆரம்ப முன்மொழிவு பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் மாற்றப்பட வேண்டியதாகிவிட்டது மற்றும் இப்போது அது ஆரம்பத்தில் இருந்ததைப் போல இல்லை. வாகன இறக்குமதி தொடர்பான ஆரம்ப முன்மொழிவு மாற்றப்பட்டு விட்டது, ஊழியர் சேமலாப நிதி(ஈ.பி.எப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈ.ரி.எப்) என்பனவற்றை ஒருங்கிணைக்கும் பிரேரணை மாற்றம் செய்யப்பட்டு விட்டது, பின்னர் ஓய்வூதியம் தொடர்பான பிரேரணை மற்றும் சம்பளங்கள் தொடர்பான பிரேரணைகளும் மாற்றம் செய்யப்பட்டு விட்டன.
- கேள்வி: அநேக கட்சிகளைப் பொறுத்தமட்டில் இந்த வரவு செலவு திட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகச் சொல்லப்பட்டது மற்றும் இத்தகைய பல மாற்றங்களைச் செய்வதற்கு அதுதான் காரணம். உங்கள் கண்ணோட்டத்தில் இந்த வரவு செலவு திட்டத்தில் இத்தனை குறைபாடுகள் இருப்பதற்கான முக்கிய காரணம் என்ன?
பதில்: இந்த வரவு செலவு திட்டத்தில் நான் காணும் பிரதான பிரச்சினை, சராசரி மனிதனின் வாங்கும் சக்தி குறைக்கப் பட்டுள்ளது. நான் காணும் முக்கியமான பிரச்சினை இதுதான். அதற்கு மேலதிகமாக நான் பேலியகொடவில் இருந்து வரும்பொழுது வியாபாரிகளிடமிருந்து எனக்கு கிடைத்த தகவலின்படி அவர்களது விற்பனை 50 விகிதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். தேயிலை மற்றும் இறப்பர் தொழிலும் சரிவடைந்து செல்கிறது மற்றும் இரத்தினக் கல் வியாபாரிகள்கூட தங்கள் வியாபாரம் கூட பாதிப்படைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதேபோல மக்களின் வாங்கும் சக்தி குறைவடையும்போது விற்பனை குறைவதால் வியாபாரமும் பாதிக்கப் படுகிறது இது ஒரு வகையான டொமினே கொள்கை. மறுபுறத்தில் டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் ரூபாயின் மதிப்பு குறைவதால் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளை கவனமாக அவதானித்து அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஒரு வழியில் இறக்குமதியை குறைப்பதின் மூலம் அவர்கள் இதைச் செய்யலாம் பதிலாக அது செலவுகளை குறைப்பதற்கு உதவும். அனால் மறுபக்கத்தில் அரசாங்கம் இறக்குமதிகளைக் குறைக்கும்போது அவர்கள் வரிகளை இழக்கவேண்டி நேரிடுகிறது. இது மிகவும் கடினமான ஒன்று
நீங்கள் ஒருபக்கத்தில் மாற்றங்கள் செய்யும்போது மறுபக்கத்தில் அதன் பக்கவிளைவுகள் உண்டாகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை சுற்றுலாத் துறை மூலமாக விரிவாக்க அரசாங்கம் விரும்புகிறது. எனினும் அதிகமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசாங்கம் முயற்சிக்கும்போது அதனால் நாட்டின் இயற்கை வளங்களுக்கு ஆபத்து உண்டாகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரந்தரமாகவோ அல்லது 99 வருட குத்தகைக்கோ காணிகளை வழங்கும்போது, அதன் ஆரம்ப முதலீடு எவ்வளவு, உண்மையான இலாபத்தை இந்த வர்த்தகங்கள் ஈட்டுவதற்கு எத்தனை வருடங்கள் ஆகும் போன்ற விடயங்களை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் மற்றும் பின்னர் எவ்வளவு காலத்துக்கு இந்த நிலங்கள் மற்றும் வளங்களை அவர்களுக்கு கொடுக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதேபோல பின்னர் ஒரு மட்டுப் படுத்தப்பட்ட காலத்துக்கு அவர்களுக்கு வரிகளில் இருந்து விலக்கு அளிக்கலாம். எனினும் வெளிநாட்டவர்களுக்கான நிலங்களின் மீது விதிக்கப்பட்ட வரிகளை அகற்றுவதின் மூலம் அவர்கள் காணிகளை வாங்குவதற்காக இங்கு வருவார்கள் மற்றும் மக்களும் தங்கள் காணிகளை வெளிநாட்டவர்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்கு ஆரம்பிப்பார்கள். காலம் செல்லும்போது இந்த நாட்டின் நிலங்கள் படிப்படியாக வெளிநாட்டவர்களின் கரங்களைச் சென்றடைந்துவிடும். இதுவும்கூட உள்ளுர் வாத்தகர்களிடம் ஒரு எதிர்மறையான விளைவினை உண்டாக்கும்.
அரசாங்கத்தின் தீமையான மற்றொரு திட்டம், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில வங்கிகளின் வலையமைப்பு முறையை பலப்படுத்தவதற்காக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பனவற்றை ஒருங்கிணைப்பது. இந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று, உள்ளுர் வங்கி வலையமைப்புக்குள் நுழைவதற்கு வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது மற்றும் அவர்களது வேண்டுகோளைப் பூர்த்தி செய்வதுதான் இந்த அரசாங்கத்தின் திட்டமும்.
- கேள்வி: இந்த நாட்களில் விவாதிக்கப்படும் இரண்டு பிரதான தலைப்புகள் விவசாயிகளுக்கான உர மானியம் மற்றும் பாடசாலை சீருடைக்கான கூப்பன் முறை. இவைகளைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: மீண்டும் ஒருமுறை அரசாங்கம் செய்திருப்பது வரி விதிப்பையே. எனினும் இந்த நடைமுறை அரசாங்கம் பணம் பெறுவதற்கான ஒன்றல்ல, ஆனால் அதற்குப் பதிலாக அரசாங்கம் தீமையான முறையில் பணத்தை சேமிக்க முயலுகிறது.
- கேள்வி: உங்கள் கட்சியை சேர்ந்த சில அங்கத்தவர்கள் அரசாங்கத்தில் இணையத் திட்டமிட்டுள்ளதாக ஒரு ஊகம் நிலவுகிறது. அது உண்மையா?
பதில்: எதிர்க்கட்சி அங்கத்தவர்கள் சிலரை அரசாங்க தரப்புக்கு மாற வைப்பதற்காக அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வருகிறது, ஆனால் அவர்கள் தோற்றுவிட்டார்கள். அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இந்தக் கணத்தில் அவர்கள் வெற்றி பெறவில்லை. அரசாங்கம் இப்போது சில காலமாக இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது மற்றும் சிலநேரங்களில் அரசாங்கம் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதை கொடுக்க விரும்புகிறது என்பதைப் பொறுத்தும் மற்றும் அவர்களின் நிதி நிலமை, அவர்களின் கஷ்டங்கள் மற்றும் தேவைகள் என்பதைப் பொறுத்தும் அரசாங்கத்தால் அவர்களை வசீகரிக்க இயலும், ஆனால் அரசாங்கம் அதில் வெற்றி பெற்றாலும்கூட நான் ஆச்சரியப் படப்போவதில்லை.
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
