எமது நாட்டில் சமீப காலங்களாக முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் எமது மத, கலாச்சார சம்பந்தப்பட்ட விடயங்களை கொச்சைப்படுத்தும் வகையிலானதுமான சில விசமமான கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வரும் கடும் போக்கு சிந்தனை இனவாதிகளான பொதுபல சேனா என்ற அமைப்பும் அதன் நிர்வாகியுமான கலகொட அத்தே ஞானசார என்ற பௌத்த பிக்குவும் தொடர்ந்தும் எமது சமூகத்தையும் எமது கலாச்சார விழுமியங்களையும் கேவலப்படுத்திக் கொண்டிருப்பதையும், அண்மையில் எமது உயிரிலும் மேலாக மதிக்கின்ற திருக்குர்ஆனை இலங்கையில் தடைசெய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தின் மூலமாக மீண்டும் தனது இனவாத பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.எனவே நாம் இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் அனுமதிப்பவர்களாக இருந்தால் இந்தநாட்டில் எமது எதிர்காலம், இருப்பு என்பவை நிச்சயமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டு எமது சமூகம் இந்த நாட்டில் அடிமைச்சமூகமாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை
அன்று மகிந்தவின் ஆட்சியில் துவங்கிய இவர்களது முஸ்லிம் சமூகத்தின் மீதான அவதூருகளும் அடாவடித்தனங்களையும் பொறுக்க முடியாத எமது சமூகம் இந்நாட்டில் சகல சமூகங்களும் நின்மதியாகவும்,சுதந்திரமாகவும், இன ஐக்கியத்துடனும் வாழவேண்டும் என்கிற எண்ணப்பாட்டுடன் இனவாத அரக்கர்களை கட்டவிழ்த்து வேடிக்கை பார்த்த மகிந்தவின் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ந்தெழுந்து நல்லாட்சிக்கான அரசாங்கம் ஒன்றினை நிறுவுவதற்காக முன்வந்த அதிமேகுதகு ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீ சேனா அவர்களுக்கு தமது முழு ஆதரவை வழங்கி கடந்த ஆட்சியாளர்களுக்கும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் தமது ஜனநாயக உரிமைப் பலத்தின் மூலமாக நிரூபித்து ஆட்சி மாற்றைத்தை ஏற்படுத்தி ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியையும் வரலாற்று பதிவையும் செய்திருந்தது அதைத் தொடர்ந்து ஆட்சிப் பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தின் அங்கீகாரத்திற்கு மதிப்பளித்து பல உத்தரவாதங்களையும், வாக்குறுதியையும் வழங்கியிருந்தது.
ஆனால் இன்று, கடந்த கால ஆட்சியின் அதே செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும் தலைதூக்கி வன்முறைகளை ஏற்படுத்துவதன் மூலமாக நல்லாட்சிக்கு கலங்கம் ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் தந்திரோபாயத்தை திரைமறைவில் இருந்து சில தீயசக்திகள் இவ்வாறான இனவாத குரோதங்களை அரங்கேற்றி இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை தோற்றுவித்து வன்முறைகளை மேற்கொள்ள எத்தனிப்பதை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக கவனத்தில் கொண்டு இதனை தடுப்பதற்கான வழிமுறைகளை துரிதகெதியில் செயல்படுத்த தவறுமாக இருந்தால் இந்த நாட்டில் மீண்டும் வன்முறைகள், அராஜகங்கள் தலை தூக்கி அது எமது நாட்டுக்கும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும், புரிந்துணர்வுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நல்லாட்சி துணைபோகின்றது என்ற பழிச் சொல்லை நல்லாட்சி அரசாங்கம் சுமக்க வேண்டிவரும் என்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு இப்படிப்பட்ட இனவாதிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை பிரயோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழியுறுத்துகின்றோம்
இது விடயத்தில் கடந்த காலங்களிலும் சரி தற்போதைய சூழலிலும் சரி எமது முஸ்லிம் தலைமைகள் இது போன்ற செயற்பாடுகளை கண்டிக்காமல் தொடர்ந்தும் அலட்சியப் போக்குடன் இருப்பதென்பது ஆரோக்கியமானதாக தெரியவில்லை
அன்று நல்லாட்சிக்கான அரசாங்கம் நிறுவப்பட்டு ஜனாதிபதிபதியாக பொறுப்பேற்ற கௌரவ அதிமேகுதகு மைத்திரிபால ஸ்ரீ சேன அவர்களின்
ஜனாதிபதி ஆணைக் குழுவினால் மகிந்த ராஜபக்ஷ அவர்களை விசாரணைக்கான அழைப்பாணை வழங்கப்பட்ட போது அதனை கண்டித்து பாராளுமன்றத்தில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி அந்த அழைப்பாணைக்கு எதிராக மகிந்தவிற்கு ஆதரவு வழங்கிய சுமார் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்றைய தினம் முழுவதுமாக பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு தமது எதிர்ப்பை அவர்கள் அங்கே வெளிக்காட்டினார்கள் அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள் இதனை நான் இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இன்று எமது சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வகையில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் எமது சமூகத்திற்கு எதிரான இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற் கொள்ளும் சதிகாரர்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி ஒற்றுமையாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கலாம் அதையும் அரசு கவனத்திற் கொள்ளவில்லை என்றால் அரசாங்கம் கொண்டு வருகின்ற எந்த ஒரு விடயத்திற்கும் அல்லது திட்டத்திற்கும் எமது ஆதரவு கிடைக்காது என்ற விடயத்தை அரசுக்கு எச்சரிக்கையாக வழங்கலாம் இல்லாது விடத்து சமூகத்திற்காக பதவிகளை தூக்கி வீசி விட்டு வெளியேறுங்கள் அதை விடுத்து சமூகத்தை ஏமாற்றும் வகையிலும் கட்சியின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்துவதற்காகவும் தனித்தனியாக இது விடயத்தில் தத்தமது கருத்துக்களையும் ஆதங்கங்களையும் பிரயோகிப்பதில் எந்த பிரயோசனமும் தரப் போவதில்லை.
எனவே இது ஒட்டு மொத்த இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையாக இருக்கிற படியினால் இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவ பிரதி நிதிகள் என்கின்ற அடிப்படையில் அனைவரும் ஒரு பொதுவான உடன் பாட்டுடன் இதுவிடயத்தில் செயற்பட வேண்டிய தார்மீகப் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து முஸ்லிம் பாராளுமன்ற பிரநிதித்துவங்கள் அனைவரும் ஒன்றினைத்து சம்பந்தப் பட்ட விடயத்திற்கு தீர்வு வழங்க கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இணையுமாறு அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடத்திலும் வினையமாக வேண்டிக் கொள்வதோடு தற்தமது அரசியல் கொள்கை கருத்து முரண் பாடுகளுக்கு அப்பால் செயற்பட தவறுவீர்களே ஆனால் தங்களுடைய சுயநல அரசியலுக்காக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றம் பெற்றவர்களுக்கு நீங்கள் உடந்தையாக இருக்கிறீர்கள் என்ற எமது குற்றச்சாட்டிற்கு நீங்கள் பொறுப் பேற்க வேண்டி வரும் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அஹமட் புர்கான்
ஊடகப் பேச்சாளர்
தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி