உலகம் மீண்டும் ஒரு நிதி நெருக்கடியை நோக்கிச் செல்லக் கூடும் என முன்னணி முதலீட்டு வல்லுநர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பன்னாட்டு நிதி நெருக்கடி போல இந்த நெருக்கடியும் இருக்கக் கூடும் என சொசையிட்டி ஜெனரால் எனும் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் எட்வர்ட்ஸ் கூறுகிறார்.
பன்னாட்டுப் பொருளாதாரத்தில் ஏற்படும் பல வளர்ச்சிகள் அமெரிக்கப் பொருளாதாரத்தை பின்னடைவை நோக்கி தள்ளும் என அவர் எதிர்வு கூறுகிறார்.
சந்தையில் பணப்புழக்கம் குறைவது, பொருட்களின் விலைகள் இறங்குவது, நுகர்வோர் பெரிய அளவில் பணத்தை செலவு செய்து பொருட்களை வாங்குவதை தாமதப்படுத்துவது, நிறுவனங்கள் முதலீட்டை நிறுத்தி வைத்தல் போன்ற பிரச்சினைகள் அலைபோல மேற்குலக நாடுகளை தாக்கும் எனத் தான் நம்புவதாக எட்வர்ட்ஸ் நம்புகிறார்.
முதலீட்டாளர்களுக்கான சூழல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், தம்மிடம் உள்ள அனைத்தையும் விற்றுவிடுமாறு ராயல் ஸ்காட்லாந்து வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்து ஒரு சில நாட்களில் ஆர்பர்ட் எட்வர்ட்ஸின் இந்தக் கருத்து வந்துள்ளது.
