விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே நிழல் முதலீடுகளாக இலங்கைக்கு வருகின்றது என்கிறார் : ஜீ.எல்.பீரிஸ்
விடுதலைப் புலிகளின் கறுப்புப்பணமே நிழல் முதலீடுகளாக இலங்கைக்கு வருகின்றது. நாட்டை பிரித்து புலிகளை பலப்படுத்தும் நோக்கத்திலேயே கறுப்புப்பணம் இலங்கையில் குவிக்கப்படுகின்றது என்று மகிந்த ஆதரவு அணியினர் குற்றம் சுமத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றையாட்சியில் அதிகாரப் பகிர்வை கேட்கும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை பிரிக்க முயற்சிக்கின்றது. ரணிலுக்கே இன்று புலிகளின் முழுமையான ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் அவ்வணியினர் தெரிவித்தனர்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே அந்த அணியினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவிக்கையில் உலகில் எந்த நாட்டிலும் அமைச்சரவை அதிகாரம் இல்லாது அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள முடியாது. ஆனால் இந்த அரசாங்கம் அமைச்சரவை அங்கீகாரம் கூட இல்லாது அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.
கடந்த 9ம் திகதி பிரதமர் முன்வைத்த அரசியலமைப்பு திருத்த யோசனை அமைச்சரவையின் அங்கீகாரம் இல்லாது கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். ஒரு சிலரது தேவைக்காக பாராளுமன்ற பிரதிநிதிகளின் வரப்பிரசாதத்தையும் பிடுங்கி எடுக்கும் வகையில் தான் இந்த செயற்பாடுகள் அமைந்துள்ளன.
அதேபோல் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை உள்ளிட்ட எவரது யோசனைகளையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆகவே அரசாங்கத்தினுள்ளேயே இன்று இணக்கப்பாடு இல்லாது ஒரு கட்சியின் ஆதிக்கத்தில் தான் ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆகவே ஜனாதிபதியின் நிலைப்பாடும் பிரதமரின் நிலைப்பாடும் எந்த வகையிலும் பொருந்தாத வகைலேயே காணப்படுகின்றன.
இன்று பொலிஸ் இராச்சியம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் நடக்கும் எந்த சம்பவம் தொடர்பிலும் மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முடியாது உள்ளது. பொலிஸ் இராச்சியம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் அடக்குமுறை கையாளப்படுகின்றது.
அன்று எம்மை அடக்குமுறைகாரர்களாக வர்ணித்தனர். வரலாற்றில் அவ்வாறான தவறுகள் நடந்துள்ளன என்று வைத்துக் கொள்வோம். அன்று குற்றம் நடந்தது என்பதற்காக இந்த ஆட்சியிலும் அது தொடருமானால் அது நல்லாட்சி என கூறமுடியாது.
இன்று மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்ள வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அன்று அவ்வாறு இருக்கவில்லை. அதேபோல் இன்று இன்னொரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதாவது பொருளாதார ரீதியில் நாடு பாரிய சிக்கலை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மிகவும் பயங்கரமான நடவடிக்கைகளை அரசு கையாள்கின்றது. அதாவது அடையாளம் தெரியாத முதலீட்டாளர்கள் மூலமாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை எமது நாட்டுக்கு கொண்டு வருவதாக நிதியமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
எனினும் சர்வதேச நாடுகளின் கறுப்புப்பணம் தான் இவ்வாறு வருகின்றது. அதேபோல் புலிகளின் பணத்தையே இவர்கள் எவ்வாறு வாங்கி நாட்டை பிரிவினையின் பக்கம் கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். இதனால் நாட்டு சர்வதேச மட்டத்தில் பாரிய அவப்பெயரை சந்திக்கவுள்ளது என்றார்.
