மெளனம் எனும் சாத்வீகக் குணத்தை மற்றவர்களுக்கும் போதித்தார் காந்தி
இன்று (ஜனவரி 30) காலை 11 மணிக்கு இந்தியா 2 நிமிட நேரத்திற்கு ஸ்தம்பித்து நிற்கும். காந்தியின் மறைவுக்காக தம் செயல்பாடுகளை மௌனித்து அஞ்சலி செய்யும் இம்முறை பல்லாண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் உள்ளது.
மவுனம், மௌனம், மோனம் என்று தமிழில் பலவிதமாக எழுதப்படும் இது, அமைதி, பேச்சற்ற நிலை என்னும் பொருள்களிலேயே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. மவுனத்தைப் பின்பற்றுபவர் மவுனி, மௌனி, மோனர் எனப்பட்டார்கள். அவர்களே முனி, முனிவர்களாயிருக்கலாம். அபிதான சிந்தாமணி மௌனம் என்பதற்கு மோனம் என்ற பொருளைத் தருகிறது. மோனம் என்பதற்கான அகராதிப் பொருள், மௌனம் என்ற குறிப்புடன் சாத்விக குணத்தொன்று என்றும் உள்ளது. அருள், ஐம்பொறி அடக்கல், ஞானம், தவம், பொறுமை, மேன்மை, மோனம், வாய்மை என்று வழங்கப்படும் எட்டு குணங்களின் மொத்தமே சாத்விகம். யோசித்துப் பார்த்தால், சாத்விகத்தின் முழு உருவமாகவே திகழ்ந்தவர் காந்தி என்று தோன்றியது. அந்நியர்களிடமும் அருளைப் பொழிந்தார்; ஐம்பொறி ஆட்சி கொண்டார்; ஞானமயமாகவே காட்சி தந்தார்; தவம் இருந்தார்; பொறுமை அவரது அணிகலன்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது; மேன்மைமிக்கிருந்தார்; வாய்மை அவரது வாழ்க்கையின் செய்தியாக ஒளிர்ந்தது. ஆக சாத்விகத்தின் நடமாடும் அடையாளமாகவே காந்தி விளங்கினார். மௌனம் என்கிற சாத்விக குணத்தை காந்தி எங்கிருந்து கண்டடைந்தார்?
மௌன எண்ணம் தோன்றிய இடம்
'யங் இந்தியா'வில் (8 ஆகஸ்ட் 1925) எழுதிய ஒரு குறிப்பிலிருந்து மௌனம் காத்தலைப் பற்றிய எண்ணம் அவரது இந்திய வருகைக்கு முன்பே அதாவது 1915க்கு முன்பே காந்திக்குத் தோன்றிவிட்டது தெரிகிறது.
“தென்னாப்பிரிக்காவில் ஒருமுறை டிராப்பிஸ்ட் துறவி (கத்தோலிக்க கிறிஸ்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள்) மடத்திற்குச் சென்றிருந்தேன். அது ஒரு ரம்மியமான இடம். அம்மடத்தைச் சார்ந்த பெரும்பாலான துறவிகள் மௌன விரதம் பூண்டிருந்தனர். அதன் உட்கருத்து என்ன என்று பேராயரைக் கேட்டேன். வெளிப்படையான காரணம்தான் என்று கூறி இவ்வாறு விளக்கினார்.
‘மானிடர்களாகிய நாம் உறுதியற்றவர்கள்; பிழை செய்யக்கூடியவர்கள் நாம் என்ன பேசுகிறோம் என்று பெரும்பாலும் நமக்கே தெரிவதில்லை. நம் உள்ளத்தே எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் அலைவற்ற மெல்லிய குரலை நாம் கேட்க விரும்பினால், நாம் ஓயாது வாய்விட்டுப் பேசிக் கொண்டே இருக்கும்போது அவ்வான்மக் குரல் நமக்குக் கேட்காது’ என்றார் பேராயர். அது எனக்குக் கிடைத்த ஓர் பொன்னான படிப்பினை” என்று எழுதினார் காந்தி.
சித்தம் மவுனம் செயல்வாக்கு எல்லாம் மவுனம் சுத்த மவுனம் என்பால் தோன்றின் பராபரமே என்று பாடுகிறார் தாயுமானவர்.சித்த மவுனம் (அறிவு மௌனம்), செயல் மௌனம், வாக்கு மவுனம் (சொல் மௌனம்) ஆகியவை தன்னிடம் அமைந்துவிட்டால் முழுமையான மௌனம் தன்பால் கவிந்துவிடும் என்கிறார் தாயுமானவர். மனத்தால், செயலால், வாக்கால் மௌனமாகிற நிலை, கற்பனைக்கெட்டாத சமாதி நிலை. இம்மூன்றுள் வாக்கு மௌனத்தையே பெரும்பாலும் இன்று நாம் அனுசரிக்கிறோம். காந்தியும் வாக்கு மௌனத்தையே கடைபிடித்தார். மௌன காலத்தில் அவர் சிந்தித்தார்; கருத்தைப் பென்சிலால் எழுதி அருகிருந்தவரிடம் காண்பித்து ஒருவகையில் செயல்படவும் செய்தார்.
கடவுள் மட்டுமே மவுனத்தை அருள முடியும் என்று தாயுமானவர் கெஞ்ச, பெர்சிய ஞானி ரூமி “மௌனம் கடவுளின் மொழி. நாம் பேசுபவை எல்லாம் தரமற்ற மொழிபெயர்ப்புகள்” என்கிறார்.
கடவுளின் மொழி
கடவுளின் மொழி மௌனமானால் அந்த மௌனத்தை எப்படிப் பேசுவது, அதாவது மௌனத்தைக் கடைபிடிப்பது எப்படி? காந்தி சொல்கிறார்.
“வாயை இறுக மூடிக்கொண்டு பேசாமலிருக்கும் மௌனம் உண்மையில் மௌனம் ஆகாது. நாக்கை அறுத்துக்கொண்டுவிட்டால்கூட அதேபோல் பேசாமல் இருந்துவிட முடியும். அது மௌனம் ஆகுமா? பேசும் திறமை இருந்தும் வீணிலே வார்த்தையாடாமல் இருப்பவர்களே மெய்யான மௌனி” (ஹரிஜன், 24 ஜுன் 1933).
“உங்கள் பேச்சு மௌனத்தை மேம்படுத்துமானால் அப்போது மட்டும் நீங்கள் பேசலாம்” என்பது காந்தியின் இன்னொரு அறிவுரை.
அயலவர் ஆதிக்கத்திலிருந்து இந்தியர்களை விடுவிக்க சத்யாக்கிரகம் என்ற முதல் ஆயுதத்தை காந்தி ஏந்தினார். அது ஒத்துழையாமையாகவும் சட்டமறுப்பாகவும் வடிவம் கொண்டது. காந்தியின் இரண்டாவது போராட்ட ஆயுதம் தன்னை வருத்திக் கொண்ட உண்ணாவிரதம். மௌனம் காந்தியின் இன்னொரு போராட்ட ஆயுதம். இந்த மௌன ஆயுதத்தைக் கொண்டு அவர் தன்னுடனே போரா டினார். மனசாட்சியின் முன்னிலையில் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ள இந்த ஆயுதத்தைக் கையாண்டார்.
மௌன நாளின் தேவை
உங்கள் மௌன நாளின் உட்கருத்து என்ன? என்று அவரது வாழ்க்கையை எழுதிய லூயி பிஷர், 1942-ல் (அவரது மௌன விரதம் தொடங்கி 21 ஆண்டுகள் ஆன நிலையில்) காந்தியைக் கேட்டார்.
“பல சிரமங்கள் என்னைப் பிய்த்து எடுத்தன. நான் கடினமாக உழைத்தேன். உஷ்ணமான ரெயில் வண்டிகளில் பிரயாணம் செய்தேன், ஓயாமல் பல கூட்டங்களில் பேசினேன். ஆயிரக்கணக்கான மக்கள் என்னிடம் வந்து கேள்விகள் கேட்டார்கள்; என்னோடு சேர்ந்து பிரார்த்தனை புரிய விரும்பினார்கள். அப்போதுதான் இது தொடங்கியது. வாரத்துக்கு ஒருநாள் ஓய்வெடுத்துக்கொள்ள விரும்பினேன். மௌன நாள் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டேன்.”
ஓய்வின் தேவைதான் காந்தியின் மௌனத்நாளை தொடக்கியிருந்தாலும் அதுவே அதன் விளைவாக இல்லை. “சந்தடிக்கும் குழப்பத்திற்கும் இடையே கடவுளிடம் நீங்கள் மௌனமான தொடர்பு கொள்ளுவதால் சஞ்சலமற்ற அமைதி ஏற்படுவதுடன் கோபத்தை அடக்கிக்கொள்ளவும் பொறுமையை வளர்த்துக்கொள்ளவும் அது உங்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவருடைய மனத்தில் கடவுள் தத்துவம் பூரணமாக நிறைந்திருக்கும்போது அவர் யார்மீதும் துவேஷமோ அல்லது கெட்ட எண்ணமோ கொள்ளுவது முடியாத காரியம்” (காந்தி நூல்கள், பத்தாம் தொகுதி, அத்தியாயம் 21).
மௌனப் பயிற்சி
தான் சோதனை செய்து கண்ட சத்தியத்தை மற்றவரையும் பயிற்சிசெய்து பார்க்கச் சொல்வது காந்தியின் வழக்கம். அதைப் போல மௌனத்தையும் அவர் முன்மொழிந்தார். “மாலைப் பிரார்த்தனையின்போது ஐந்து நிமிட நேரம் மௌனமாக இருக்க வேண்டுமென நான் கூறினேன். கூட்டத்தில் உள்ளவர்களின் இதயம் பிரார்த்தனையில் லயித்துவிடுமாயின் சந்தடியெல்லாம் நின்றுவிடும். பின்னர் குழந்தைகள்கூட ஒத்துழைக்கக் கற்றுக்கொள்வார்கள். இங்கிலாந்தில் நடந்த கூட்டங்களுக்கு நான் சென்றது உண்டு. அங்கே அரைமணி நேரத்திற்கு மேலும் எல்லோரும் பூரண மௌனத்தை அனுசரிப்பார்கள். சமாதி என்பதற்கு மௌனம் என்பதே பொருளாகும். முனி, மௌனம் என்பவை ஒரே தாதுவிலிருந்து வந்த சொற்களாகும். முதன்முதலாக மௌனத்தை நாம் பயிற்சி செய்கிறபோது நம் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் உண்டாகும். நாம் தூங்கவும் ஆரம்பிப்போம். இந்தக் குறைகளை எல்லாம் அகற்றுவதற்காகவே மௌனம் விதிக்கப்பட்டிருக்கிறது. நாம் அதிகமாகப் பேசவும், உரத்த சப்தங்களைக் கேட்கவும் பழக்கப்படுத்திக்கொண்டிருக்கிறோம். எனவே மௌனத்தை அனுசரிப்பது கஷ்டமாக இருக்கிறது. எனினும் சிறிது பயிற்சி செய்வோமாயின் மௌனத்தை நாம் விரும்புவோம். அதில் விருப்பம் ஏற்படும்போது அது நமக்கு விவரிக்க முடியாத மனஅமைதியைக் கொடுக்கும்” (காந்தி நூல்கள், பத்தாம் தொகுதி, பிற்சேர்க்கை).
காந்தியினுடையது பயனுள்ள வேண்டுகோள். மௌனம் காப்பதன் மூலம் நவீன உலகின் இரைச்சல்களிலிருந்து விலகாமலேயே அதிலிருந்து தப்பிப்போம். நாம் பேசாத அந்தச் சிறுபொழுதிலாவது பூமி மேலும் ஒலிமாசு அடையாமல் இருக்கக்கூடும்.
