எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய நடவடிக்கை
தேர்தல் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை ஆராயும் நடவடிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு மூலமாக குறித்த முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகள் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு வருவதாக அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். குறித்த ஐவரடங்கிய குழுவிற்கு மேலதிகமாக பல நிறுவனங்களின் கூட்டாக தொழில்நுட்ப குழு ஒன்றும் மாவட்ட மட்டத்தில் 25 குழுக்களும் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
குறித்த நடவடிக்கைகள் குறைபாடுகள் இன்றி நடைபெற வேண்டும் எனவும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் வாரத்திற்குள் அமைச்சரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம் பெறவுள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற சபைகளின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகளை ஆராய்வதற்கான காலத்தினை அதிகரிப்பது தொடர்பில் இதன் போது ஆராயப்படவுள்ளது. தேர்தல் தொகுதிகளில் எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் கருத்துகளை கூறுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது 500 இற்கு மேற்பட்ட மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
