வடபகுதி மாணவர்களின் கல்வியை கெடுத்துக் குட்டிச்சுவராக்க திட்டமிட்டு சதி! : வடமாகாண முதலமைச்சர் எச்சரிக்கை!
வடபகுதி மாணவ மாணவியர்க்குரிய மிகச் சிறப்பான இயல்பு அவர்கள் கல்வியில் மேம்பட்டிருப்பதே. இதனைக் கெடுத்துக் குட்டிச் சுவராக்கும் வகையில் பல்வேறு தீய நடவடிக்கைகள் எமது மாணவ சமுதாயத்தின் மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவில் இந்துக்கல்லூரியில் தரம் 6 மாணவர்களுக்கான கால்கோள் விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,ஒரு முதலமைச்சரின் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட சுமை நிறைந்தது என்பதை, இப்பொழுதே உணர்கின்றேன். ஒரு முதலமைச்சர் பேச்சாளராகவும் நிர்வாகியாகவும் சகல துறை வல்லுநராகவும் மக்கள் மனமறிந்து நடப்பவராகவும் சமயோசிதம் மிகுந்தவராகவும் சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய வராகவும் ஊர் உலகத்தில் நடப்பதை உணர்ந்தவராகவும், உடல் வலு கொண்டவராகவும் இன்னும் பல தகைமைகளைக் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்கின்றேன்.
இன்று இந்தக் கால்கோள் விழாவில் பங்கு பற்றும் இளஞ்சிறார்கள் ஒவ்வொருவரும் மாகாண முதலமைச்சராகவும் நாட்டின் பிரதமராகவும் ஏன் ஜனாதிபதியாகவும் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. கல்வியிலும் விளையாட்டுக்களிலும் சிறந்து விளங்க எத்தணியுங்கள். இறைவன் அருள் இருந்தால் நீங்களும் ஒரு நாள் முன்னணிப் பதவிகள் வகிக்கலாம் என்று என்மாணவச் செல்வங்களுக்குச் சொல்லி வைக்கின்றேன்.
இன்று சேர்ந்து கொள்ளும் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்கள் கற்றல் நடவடிக்கைகளில் எதுவித மயக்கமோ தயக்கமோ இன்றி “கற்கக் கசடற என்பதற்கமைய முழுமையாகக் கற்றுத் தேறி எல்லாப் பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முதல்தர மாணவர்களாக நாம் இக் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும் என்ற உறுதி மொழியை இன்றே எடுத்துக்கொள்ளல் அவசியம்.பல மாணவ, மாணவியர்கள் இளமைப் பருவத்தில் தமது கற்றல் நடவடிக்கைகளை வெகு சிறப்பாக மேற்கொள் கின்ற போதிலும் மேல் வகுப்புகளுக்கு வருகின்ற போது கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாது பிறபொழுது போக்குகளிலும் மாயைகளிலும் மனத்தைத்தளர விட்டு கற்கின்ற காலத்தை வீணடித்த பின்னர் மனம் வருந்தி செய்வத றியாது தொழிலும் இல்லை பணமும் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள்.
வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாக விரக்தியின் விளிம்பில் வாழ்கின்ற பலரை நாம் கண்டிருக்கின்றோம். புதன்கிழமைகளில் என்னைச் சந்திக்க வரும் பலர் தமது நிலையைக் கண்ணீரும் கம்பலை யுமாகக் கூறுவார்கள்.இந்த நிலை உங் களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமேயாயின் இப்போதிருந்தே நீங்கள் கற்றல் நடவடிக்கைகளில் மிகவும் முனைப்புடன் ஈடுபடல் வேண்டும். கல்வியானது வெளிச்சத்திற்கொப் பானது. இருட்டை வெளிச்சம் போக்குவது போல் அறியாமை யைக் கல்வி நீக்குகின்றது. கல்வி யில் சிறந்து விளங்க உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தெரியாதவர்களுடனான சிநேகிதம், உங்களை விட வயதில் பல வருடங்கள் கூடியவர்களுடனான சிநேகிதம் என்பன உங்கள் வாழ்வை வீணாக்கி விடும் என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இன்றைய காலம் அவ்வாறானது. பத்திரிகைகளில் தினமும் வருகின்ற பல திடுக்கிடும் செய்திகள் எம்மை வருத்துவனவாக அமைந்துள்ளன. வடபகுதி மாணவ மாணவியர்க்குரிய மிகச் சிறப்பான இயல்பு அவர்கள் கல்வியில் மேம்பட்டிருப்பதே.
.
இதனைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் வகையில் பல் வேறு தீய நடவடிக்கைகள் எமது மாணவ சமுதாயத்தின் மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறான செயல்களுக்கு நீங்கள் பங்குதாரர்களாகா தீர்கள். தெரிந்தோ தெரியாமலோ அவற்றி;ல் ஈடுபட்டுவிடக் கூடாது என உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் நண்பர்கள் யாராவது தீய வழிகளில் ஈடுபடு வார்களேயானால் அவர்களையுந் திருத்தி உங்களின் நல்ல வழிகளில் அவர்களையும் கொண்டு செல்வதற்குப் பாடுபடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்
