மக்கள் வங்கியின் புதிய தலைவராக நிஸ்ஸங்க நாணயக்கார
சட்டத்தரணி நிஸ்ஸங்க நாணயக்கார மக்கள் வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுயாதீன தொலைக் காட்சியின் தலைவராகவும் செயற்பட்ட ஹேமசிறி பெனாண்டோ, மக்கள் வங்கிக்கும் தலைவராக செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, ஹேமசிறி பெனாண்டோ, சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக மாத்திரம் செயற்படுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. புதிய மக்கள் வங்கி தலைவரான நிஸ்ஸங்க நாணயக்கார, சுமார் 25 வருடங்களாக சட்டத்தரணியாக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மக்கள் வங்கியால் அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய விளம்பர பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு அதன் தொழிற்சங்கம் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
