Saturday, 30 January 2016

மொழி , மதங்களின் , சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து

மொழி , மதங்களின் , சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து
மொழி , மதங்களின் , சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து
அச்சுறுத்தல் எதுவும் இன்றி, அவரவருக்குப் பிடிக்கும் மதங்களை, மக்கள் பின்பற்றும் சுதந்திரம் மிகமிக அவசியமானது. உலகளாவிய மட்டத்தில் மத சுதந்திரம் நிலைக்கவும் நீடிக்கவும், வகை செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு கருத்து வெளியிட்டு இருப்பவர் மதகுரு எவரும் அல்லர்; அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவே.

உலக மத சுதந்திர தினமான நேற்று, தாம் விடுத்த செய்தி ஒன்றில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். பல்வேறு நாடுகளிலும், மதரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் மக்களை மனதிற்கொண்டு, அவர் இந்தக் கருத்தை முன்வைத்திருப்பார் என்று கொள்ளலாம்.

மனித உரிமைகளை, ஒவ்வொருவரும் இன, மத, பால், சாதி வேறுபாடு இன்றிக் கடைப் பிடிக்க, அனைத்துலக நாடுகள் ஒன்றிணைந்து, ஐக்கிய நாடுகள் சபை ஊடாகப் பட்டயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மதவெறி காரணமாகக் கொலைகளில் ஈடுபடுவோர், சிறுபான்மை இன மக்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொள்வோர், தேச மட்டத்தில் மத மற்றும் வேறு காரணங்களை முன்வைத்துச் செயற்படுவோர் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும், அமெரிக்க ஜனாதிபதி அச்சொட்டாகச் சுட்டிக்காட்டி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில், அமெரிக்க ஜனாதிபதியின் கருத்து, மத ரீதியாக மட்டுமன்றி, இனரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கும் பொருத்தம் உடையது. இதேவேளை, மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து, ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் பட்டயங்களை உருவாக்கி உள்ளமையும், அந்தப் பட்டயங்களுக்கு இசைவாகத் தத்தமது நாடுகளில் சட்டங்களை இயற்றி இன, மொழி, மத உரிமைகளைப் பிசகின்றிச் செயலாக்குவது, ஒவ்வொரு நாட்டு அரசினதும், தவிர்க்கக் கூடாத கடமையும் பொறுப்பும் ஆகும்.

மிகக் குறிப்பாக, சிறுபான்மை இனங்களின், அவற்றின் மொழிகளின், மதங்களின் சுதந்திரமான செயற்பாடுகளுக்கு எந்த வகையிலும், விதத்திலும் பாகுபாடோ அல்லது வேற்றுமையோ காட்டாமல் இருப்பதற்கான கடுமையான சட்டங்களும் அவற்றின் ஊடு தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும்.

மொழி, மதம், பண்பாடு போன்ற மக்களுக்கு உரிய, அவர்களிடம் இருந்து பிரிக்க முடியாத, வாழ்வியல் அலகுகளைத் தட்டி வீழ்த்தவோ, அன்றிஅழித்துத் துடைக்கவோ மாற்றார் எவருக்கும் உரிமை இல்லை என்பதையும்,

உலகின் மனிதர்கள் எல்லோரும் ஒருவருக்கு மற்றவர் சகோதரரே என்ற நிலையும், இன, மத, பேதங்கள் துடைத்து எறியப்பட வேண்டும் என்ற கோட்பாடும்,

அதன் செயல் வடிவங்களிலும் மேலோங்கு வதற்கு வழி செய்யப்படுவதும்--
தேசங்களினதும் அவற்றின் தலைமைத் துவங்களினதும் முதன்மைப் பொறுப்பாகும்; தட்டிக்கழிக்கக் கூடாத கடமையும் ஆகும்.
Loading...