வடக்கில் 51 வீதமானோர் சமுர்த்தி கோருகின்றனர்!
வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த சனத்தொகையின் அரைவாசி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தமக்கு சமுர்த்திக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். சமுர்த்தி மீளாய்வு தற்போது முன்னெடுக்கப் பட்டு வருகின்ற நிலையில், வடமாகாணத்தின் மொத்த சனத்தொகையின் 51.8 சதவீதமான மக்கள் தமக்கு சமுர்த்தி நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ளனர்.
வறுமைக்குட்பட்டோரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகச் சமூர்த்திக் கொடுப்பனவு வழங்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 3 ஆயிரத்து 500 ரூபாவுக்குக் குறைவான மாதாந்த வருமானம் உடைய குடும்பங்களே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்கள் என்று, சமூர்த்தி நிவாரணம் வழங்கல் தொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமுர்த்தி நிவாரணம் தொடர்பிலான மீளாய்வு தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே சமுர்த்தி நிவாரணம் பெற்றுக் கொள்பவர்களிடமிருந்தும், புதிதாகச் சமுர்த்தி நிவாரணம் பெற்றுக்கொள்ள விரும்புபவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் சமுர்த்தி உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம சேவையாளர் ஆகியோரினால் உறுதிப்படுத்தப்படும்.
இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள், புள்ளி விபரத் திணைக்களத்தினால் கணினி மயப்படுத்தப்படவுள்ளன. அதன் பின்னர், வருமானச் செலவீடு கணிப்பீடு அடிப்படையில் சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்பட்ட சமூர்த்தி மீளாய்வின் போது, யாழ்.மாவட்டத்தில் 53 ஆயிரத்து 906 குடும்பங்கள் ஏற்கனவே சமூர்த்தி நிவாரணங்களைப் பெற்று வருகின்றன.
புதிதாக 35 ஆயிரத்து 220 குடும்பங்கள் சமூர்த்தி நிவாரணம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளன. சமூர்த்தி பெற்று கொள்வதற்காக மொத்தமாக 89 ஆயிரத்து 126 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இது யாழ்.மாவட்ட சனத் தொகையின் 46.9 சதவீதமாகும். கிளிநொச்சி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 734 குடும்பங்கள் ஏற்கனவே சமூர்த்தி நிவாரணங்களைப் பெற்று வருகின்றன.
புதிதாக 12 ஆயிரத்து 500 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. சமூர்த்தி பெற்று கொள்வதற்காக மொத்தமாக 24 ஆயிரத்து 234 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இது மாவட்ட சனத் தொகையின் 40 சதவீதமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 11 ஆயிரத்து 114 குடும்பங்கள் ஏற்கனவே சமூர்த்தி நிவாரணங்களைப் பெற்று வருகின்றன. புதிதாக 12 ஆயிரத்து 266 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. சமுர்த்தி பெற்று கொள்வதற்காக மொத்தம் 23 ஆயிரத்து 380 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இது மாவட்ட சனத்தொகையின் 56 சதவீதமாகும்.
மன்னார் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 168 குடும்பங்கள் ஏற்கனவே சமுர்த்தி நிவாரணங்களைப் பெற்று வருகின்றன. புதிதாக 13 ஆயிரத்து 988 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. சமுர்த்தி பெற்றுக் கொள்வதற்காக மொத்தம் 27 ஆயிரத்து 156 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இது மாவட்ட சனத்தொகையின் 61 சதவீதமாகும்.
வவுனியா மாவட்டத்தில் 12 ஆயிரத்து 9 குடும்பங்கள் ஏற்கனவே சமுர்த்தி நிவாரணங்களைப் பெற்று வருகின்றன. புதிதாக 18 ஆயிரத்து 603 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ளன. சமுர்த்தி பெற்றுக் கொள்வதற்காக மொத்தம் 30 ஆயிரத்து 612 குடும்பங்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் இது மாவட்ட சனத்தொகையின் 56 சதவீதமாகும்.
