நன்கு திட்டமிட்டு தாஜுதீன் கொலை! சந்தேக நபர்களை உடன் கைது செய்யுமாறு சி.ஐ.டியினருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் சாவு திட்டமிட்ட கொலையயன கொழும்பு மேலதிக நீதிவான் நீதி மன்றம் நேற்று அறிவித்துள்ளது. அத்துடன், இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை உடன் கைது செய்யுமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
தாஜுதீனின் சாவு தொடர்பான விசாரணை நேற்றுக் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிவான் நிஷாந்த பீரிஸ் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர மற்றும் தற்போதைய சட்டவைத்திய அதிகாரி அஜித் தென்னக்கோன் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மரணச் சான்றிதழ்கள், ஜீன்ரெக் நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட மரபணுப் பரிசோதனை அறிக்கை, குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் மற்றும் சி.சி.ரி.வி. காணொளி விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், இலங்கையின் 296ஆவது தண்டனைச் சட்டத்தின் பிரகாரம் தாஜுதீனின் சாவு ஒரு திட்டமிட்ட கொலையயன நிரூபணமாகியுள்ளது என்று நீதிவான் இதன்போது தெரிவித்தார்.
இந்நிலையில் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களையும் உடன் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவும் பிறப்பித்தார்.
2012ஆம் ஆண்டில், கொழும்பு, நாரஹேன்பிட்டியில் காரில் சென்ற வேளையில், வசீம் தாஜுதீன் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்தச் சாவு ஒரு விபத்து என அப்போது பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் முடக்கப்பட்டன.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சாவு தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என தாஜுதீனின் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். குறித்த சாவில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு, தாஜுதீனின் சாவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்தது. தாஜுதீனின் சாவில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம்,சடலம் தோண்டியயடுக்கப்பட்டுப் பகுப்பாய்வு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இக் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்களான நாமல் ராஜபக்ச, யோசித ராஜபக்ச மற்றும் மஹிந்தவின் குடும்பத்துடன் நெருக்கமானவர்கள் தொடர்பு பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
