Monday, 7 March 2016

கொழும்பு சுதந்திர சதுக்கத்தின் பாதுகாப்பு அதிகாரி பணிநீக்கம்

Image copyrightOccupy Sri Lanka
Image captionசுதந்திர சதுக்க பாதுகாப்பு பணியாளர்களின் நடவடிக்கையை கண்டித்து சமூக வலைத்தளம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடந்த அமைதிப் போராட்டம்
இலங்கையின் தலைநகர் கொழும்பில் சுதந்திர சதுக்கத்தில் இளம் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் அங்கிருந்த காவலர்கள் பலவந்தமாக வெளியேற்றிய சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பாதுகாப்புக்கு பொறுப்பான மூத்த பாதுகாவல் அதிகாரியை அரசாங்கம் பணியிலிருந்து நீக்கியுள்ளது.
சுதந்திர சதுக்கத்துக்கு பிள்ளைகளுடன் சேர்ந்து வராத ஜோடிகளை வெளியேற்றுவது தங்களின் கடமை என்று கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த காவல் பணியாளர்களை வீடியோ படம்பிடித்த ஜோடி ஒன்று அதனை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருந்தது.
ஆணும் பெண்ணும் சேர்ந்திருக்க முடியாது என்ற காவலர்களின் கருத்தைக் கண்டித்து, சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் நேற்று திங்களன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் 'ஒழுக்கமாக' நடந்துகொள்ள வேண்டும் என்று காவலர்கள் கூறியதை கண்டித்திருந்த உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரும் துணை வெளியுறவு அமைச்சருமான ஹர்ஷ டி சில்வா, 'ஒழுக்கம்' என்பதற்கு அவர்கள் அர்த்தம் கற்பிக்கும் விதம் தவறு என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனையடுத்து, சுதந்திர சதுக்கத்துக்கு பாதுகாப்பு சேவையை வழங்கியிருந்த அரசுக்கு சொந்தமான பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநரை கலாசார அமைச்சு பணிநீக்கம் செய்துள்ளது. அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தையும் அரசாங்கம் ரத்துசெய்துள்ளது.
Loading...