கொழும்புத் துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்கள்!
ஜப்பானிய கடல்சார் தற்காப்புப் படையின் இரண்டு போர்க்கப்பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன. ஜே.எஸ் மகினாமி, ஜே.எஸ்சுசனாமி ஆகிய போர்க்கப்பல்களே கொழும்பு வந்துள்ளன.
நல்லெண்ணப் பயணமாக நேற்று இந்தப் கொழும்புத் துறைமுகம் வந்த போது இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து, மூன்றாவது பாதுகாப்பு அணியின் கட்டளை அதிகாரி கப்டன் தகாஷி யோஷியோகா, மற்றும் இரண்டு போர்க்கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
வரும் 14ஆம் நாள் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ள, இந்தப் போர்க்கப்பல்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜப்பான் சென்றிருந்த போது, கடல்சார் ஒத்துழைப்பு விடயத்தில் இரண்டு நாடுகளினதும் பாதுகாப்பு பிரிவுகளுக்கும் இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
