சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் !
சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக இன்று காலை 10 மணியில் இருந்து 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘சம்மந்தன் ஐயாவே! சம்பூருக்கு தீர்வென்ன, சோற்றையும் தந்து நஞ்சையும் தருவதா, நிலக்கரி மின் நிலையம் மக்களின் வாழ்வுக்கு நாசம், வளமான சம்பூரை சுடுகாடு ஆக்காதே, நிலக்கரி தூசால் மக்களை கொல்லாதே, நல்லாட்சி அரசே மக்களுக்கு பதில் சொல்லு’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
சம்பூர் அனல் மின்நிலையத்தினால் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற இன, மத வேறுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கைக்கே ஆபத்து. இதனால் இதனைத் தடுத்து நிறுத்த அரசியல்வாதிகளும், அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.