Tuesday, 14 June 2016

தகமையுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் வேலை கிடைப்பதில்லை

தகமையுள்ள தமிழர்களுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் வேலை கிடைப்பதில்லை
                                          பி.கே. பாலச்சந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின்(ரி.என்.ஏ) தலைவரும் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான R.-Sampanthanஆர்.சம்பந்தன், வெள்ளிக்கிழமை ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில், தகமையுள்ள தமிழர்களுக்கு அரசாங்க வேலைகள் கிடைப்பதில்லை என்று புகார் தெரிவித்தார். முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களை பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்கிறார்கள், சிங்கள தலைவர்கள் சிங்களவாகளுக்கு வேலை தேடித் தருகிறார்கள் மற்றும் அதிகாரத்திலுள்ள ஒரு சில தமிழர்கள் சில தமிழர்களை ஆட்சேர்ப்பு செய்கிறார்கள், ஆனால் தகுதியும் திறமையுள்ள தமிழர்கள் அரசாங்க சேவையில் வேலைகளை பெற இயலாத நிலையிலுள்ளார்கள் என சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு ஸ்ரீலங்காவில் வெகு நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு புகார் மற்றும் அந்த நிலமையில் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை என ரி.என்.ஏ தலைவர் சுட்டிக் காட்டினார்.
2015ம் ஆண்டு தற்போதைய அரசாங்கம் நடைமுறைக்கு வந்தது முதல்,அரசாங்க வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யும்போது அதில் இன விகிதாச்சாரம் பேணப்பட வேண்டும் என அவர் கோரிக்கை வைத்தார்.
காணிப் பிரச்சினை
யுத்தத்தின்போது இராணுவத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட காணிகளில் சில அதன் அசல் உரிமையாளரான பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட போதிலும், கையகப்படுத்தப்பட்ட பெரும்பாலான காணிகள் இன்னமும் இராணுவத்திடமே உள்ளன என சம்பந்தன் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வலிகாமம் பகுதிக்கும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரவிப்பாஞ்சானுக்கும் சமீபத்தில் விஜயம் செய்தபோது, இராணுவத்தின் தேவைகளுக்காக பெறப்பட்ட வீடுகள் இராணுவத்தால் பயன்படுத்தப் படாமல் இருப்பதை தன்னால் காணக்கூடியதாக இருந்ததாகத் அவர் தெரிவித்தார். இராணுவம் ஏன் இந்த வீடுகளை அதன் அசல் உரிமையாளரான பொதுமக்களிடம் திரும்ப வழங்கக்கூடாது? என அவர் கேட்டார்.
ஆலோசனைகள் கிடையாது
சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது அல்லது வெளிநாட்டு நிதியுதவியுடன் தமிழ் பகுதியில் அபிவிருத்திகளை மேற்கொள்ளும்போது, வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 18 பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கலந்தாலோசிப்பது கிடையாது. ரி.என்.ஏ யின் 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 பேர் வடக்கு மற்றும் கிழக்குக்கு சொந்தமானவர்களாக இருப்பதால் விசேடமாக ரி.என்.ஏ யிடம் கலந்தாலோசிக்கப் படவேண்டும்.
தேசிய பாதுகாப்பு
இன்னமும் சிறைகளில் வாடும் 150 எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்களை விடுதலை செய்யவேண்டும் என்கிற ரி.என்.ஏ யின் கோரிக்கைக்கு சிங்கள தேசியவாதிகள் பக்கம் இருந்து கிளம்பிய எதிர்ப்பு தொடர்பாக சம்பந்தன் கூறுகையில் தமிழர்களுக்கு நீதி மற்றும் இன சமத்துவம் வழங்குவதன் மூலமே தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமே தவிர  150 எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதின் மூலமாக அல்ல எனத் தெரிவித்தார். ராஜபக்ஸ அரசாங்கம் 12,000 புலி அங்கத்தவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்ததை சம்பந்தன் சுட்டிக்காட்டினார். அதேவேளை சிறிசேன – விக்கிரமசிங்க அரசாங்கம் இன நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்ட அவர், 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல் மற்றும் கடந்த ஆகஸ்ட்டில் நடந்த பாராளுமன்ற தேர்தல் என்பனவற்றைத் தொடர்ந்து அது பதவிக்கு வந்தது முதல் அது இன்னும் அதிகமானவற்றை செய்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பந்தன் - விக்னேஸ்வரன் மோதல்
தமிழர்களின் மனக்குறைகள் பற்றிய சம்பந்தனின் கடும் தாக்குதலான பேச்சு, அவரது போட்டியாளரான வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக விடுத்த பல தாக்குதல் அறிக்கைகளின் எழுச்சியின் விளைவாக வெளிவந்தது. அரசாங்கம் தமிழர்களின் மனக்குறைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தீர்வு காண்பதில் வெறும் கண்துடைப்புக்காக விருப்பமிருப்பதாகக் காட்டிக்கொண்டு அதை தாமதமாக்கி தீர்வு காணத் தவறியமைக்காக விக்னேஸ்வரன் அரசாங்கத்தை பல வழிகளிலும் கடுமையாக தாக்கி வந்துள்ளார்.
இரண்டு வருடங்களாக முதலமைச்சராக இருந்துவரும் விக்னேஸ்வரன் அநேகமாக ஒரு இரண்டாவது பதவிக் காலத்துக்காக பாடுபட்டு வருகிறார் அல்லது தமிழ் அரசியலில் ஒரு பெரிய பதவியை பெறுவதற்கு தயாராகிறார். சிங்கள ஆதிக்கத்தின் ஊடுருவல் மிக்க ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்து போராடும் அதேவேளை, நிருவாகத்தை பலப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தப் போவதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
தமிழ் ஊடகங்கள் விக்னேஸ்வரனின் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை ஆதரித்தும் மற்றும் சம்பந்தனின் வசதிக்கேற்ப ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் இணக்கமாகச் செயல்படும் நிலையை விமர்சித்தும் வருகின்றன. இந்த உணர்வை மாற்றுவதற்காகத்தான் சம்பந்தன் பாராளுமன்றத்தில், நீதி மற்றும் சமத்துவம் என்பனவற்றின் அடிப்படையில் தமிழர்களுக்கு ஒரு நீடித்த அரசியல் தீர்வு கிடைக்கும் வரை ரி.என்.ஏ அரசாங்கத்தில் இணைய மாட்டாது எனத் தெரிவித்தார்.
இந்த கடுமையான நிலைப்பாட்டுக்கு ஒரு முன்னுதாரணத்தை வழங்குவதற்காகத்தான், வியாழனன்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்காவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீhமானத்துக்கான வாக்கெடுப்பில் ரி.என்.ஏ கலந்துகொள்ளவில்லை. அந்த வாக்களிக்காத நிலைப்பாடு, வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்கள் பற்றி தங்களுடன் கலந்தாலோசிக்க தவறியமைக்கு எதிரான கண்டனமாக இருந்தது என ரி.என்.ஏ தெரிவித்தது.
 
Loading...