பொருளாதார பாதிப்பை தடுக்க பிரிட்டனுடன் ஒப்பந்தம்;ஹர்ஷடி சில்வா
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான ஆணையை அந்நாட்டு மக்கள் வழங்கியுள்ள நிலையில் இலங்கையின் பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கத்தை தவிர்ப்பதற்காக பிரித்தானியாவுடன் இலங்கை வர்த்தக ஒப்பந்தமொன்று செய்யவுள்ளது.
வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷடி சில்வா இந்த தகவலை நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறவேண்டுமென அந்நாட்டு மக்கள் ஆணைவழங்கியுள்ளனர். எனவே, அந்நாட்டின் வெளியேற்றமானது உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும். அவை எத்தகைய மாற்றங்கள் என்பதை உரிய வகையில் எதிர்வுகூறமுடியாதுள்ளது.
எனினும், அனைத்துலக பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கமானது எமது பொருளாதாரத்திலும் தாக்கத்தை செலுத்தும். எனவே, இதை சாதாரணதொரு விடயமாக கருதிவிடமுடியாது.
ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதற்குரிய முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கையின் ஏற்றுமதியில் 40 சதவீதமானவை பிரிட்டனையே தங்கியுள்ளன. இந்நிலையில், மேற்படி ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறினால் வரிச்சலுகைகிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
எனவேதான், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசாங்கம் இருந்தது. அதற்குரிய முயற்சிகளையும் எடுத்திருந்தது. ஆனால், முடிவு சாதகமாக அமையவில்லை. இருப்பினும், அடுத்த நடவடிக்கையாக பிரித்தானியாவுடன் பொருளாதார உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படும். இது பற்றி பிரதமர் சபைக்கு தெரியப்படுத்துவார் - என்றார்.