காணிசுவீகரிப்பு சட்டத்தின்கீழ் படையினர் காணிகளை சுவீகரிக்கமுடியாது- முதல்வர் விக்கி
காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் படையினருக்கு காணிகளை சுவீகரிப்பு செய்ய முடியாது என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் படையினர் படைமுகாம்களை அமைப்பதற்கும், சிவில் பாதுகாப்பு படைக்கான பண்ணைகள் அமைப்பதற்கும் பெருமளவு நிலத்தை தமக்கு வழங்குமாறு மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், காணி அமைச்சு ஆகியவற்றிடம் கேட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் கருத்து வெளியிடுகையில், வடமாகாணத்தில் படையினர் வசம் இருக்கும் காணிகள் குறித்த தகவல்களை அரசாங்க அதிபர்களிடமிருந்து பெற்றிருக்கின்றோம். அந்த தகவல்களில் படையினர் வசம் இருக்கும் பெரிய நிலங்கள் தொடர்பாக எந்தவொரு தகவல்களும் இல்லை.குறிப்பாக முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏ-9 பிரதான வீதிக்கு அருகில் சுமார் 1702 ஏக்கர் நிலம் படையினருடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றது.
இந்த பகுதிக்கு அதிகாரிகள், அரசியல்வாதிகள், மக்கள் என எவருமே போக முடியாது எனவும் இவ்வாறான இடங்கள் தொடர்பான தகவல்கள் மாவட்ட அரசாங்க அதிபர்கள் வழங்கிய தகவல்களில் குறிப்பிட்டிருக்கவில்லை. மேலும் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிலங்களை சட்டரீதியாக தங்களுக்கு உரித்துடையாதாக்கி கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். ஆனால் அதற்கு படையினர் உரித்துடையவர்கள் அல்ல. சுவீகரிப்பு சட்டத்தின் பிரகாரம் ஒரு நிலத்தை சுவீகரிப்பதாக இருந்தால் அதற்கான காரணம் பொது தேவை அதாவது பொதுமக்களுக்கான முக்கிய தேவை ஒன்றாக இருக்க வேண்டும்.
ஆனால் படைமுகாம் பொது தேவையாக இருக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என கோரி வரும் நிலையில் படைமுகாம் அமைப்பு பொது தேவையாக கருதப்படாது. அத்துடன் படையினர் சட்டரீதியாக நிலங்களை சுவீகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் பொருத்தமற்றவை. அது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
