Wednesday, 25 January 2017

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் குழு அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம்

கௌரவ சபாநாயகர் அவர்களே!

கடந்த 28. 10. 2016 அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முdouglas devaயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற குழு அறிக்கை தொடர்பில் நடைபெறுகின்ற இன்றைய தின விவாதத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை இந்த சபையில் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமையையிட்டு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல்துறைகள் சார்ந்த பிரச்சினைகள் - வௌ;வேறு உருவங்களில் - அல்லது ஒரே வடிவத்தில் எழுந்து நிற்பதால் எமது நாட்டில் பல காலந்தொட்டு புறையோடிப்போயிருக்கக் கூடிய, மிக முக்கியமான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாம் தவறி வருகின்றோம். இந்த வழிமுறையானது ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வருகின்றது. 

ஓர் ஆட்சி அமையப்பெற்று 6 மாதங்களில் அல்லது ஆகக் கூடினால் ஒரு வருட காலத்துக்குள் எமது முக்கியப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள நாம் முன்வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பவன் நான். இல்லாது போனால், 'ஆறிய கஞ்சி பழங் கஞ்சி' என்பதைப்போல்,  வௌ;வேறு பிரச்சினைகள் பல உருவாகி எமது முக்கியப் பிரச்சினைகள் அடிபட்டுப் போகும் நிலையே எற்படும் என்பதே யதார்த்தமாகும்.

அந்த வகையில், இந்த நிலைப்பாட்டை எமது தமிழ் தலைமைகள் தொடர்ந்து கோட்டை விட்டு வருவதனால், எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் காலந்தாழ்த்தப்பட்டுக் கொண்டே வருகின்றன.

மேற்படி 'கோப்' குழு அறிக்கை தொடர்பில் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் பல்வேறு வாதப் பிரதி விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, அநேகமாக பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தன. அதே போன்று, இந்த விவகாரம் எமது மக்களிடையேயும் பல்வேறு வகையிலான கருத்துருவாக்கங்களுக்கு வழிவகுத்து விட்டுள்ளமையையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

'கோப்' குழு அறிக்கையில் சுமார் 22 அரச நிறுவனங்கள் தொடர்பிலான விடயங்கள் அடங்குவதாகத் தெரிய வருகிறது. ஆனால், இவ்வனைத்து நிறுவனங்களையும் மீறி, மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விவகாரமே மிகுந்த சர்ச்சையினைத் தோற்றுவித்துள்ளதாக – அல்லது தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மேற்படி மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பான மோசடி தொடர்பில் விசாரணையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி ஆணக்குழு ஒன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுவும், ஒரு வரவேற்கத்தக்க ஏற்பாடாக இருப்பினும், இவ்வாறான ஏற்பாடுகள் ஏற்கனவே மேற்கொண்டிருக்கப்படல் வேண்டும் என்ற நிலைப்பாடே மக்கள் மத்தியில் நிலவுவதையும் நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

அதே நேரம், மேற்படி பிணைமுறி தொடர்பாக கீனியாவல பாலித்த தேரர் அவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தொடர்ந்துள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பிணைமுறி தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ள இன்றைய தினத்தை அண்மித்து, மேற்படி இரண்டு விடயங்கள் தொடர்பிலான செயற்பாடுகளும், இந்த பிணைமுறி தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை குழப்புகின்ற நடவடிக்கைகளே என்ற பார்வையே தற்போது நாட்டில் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதையும் இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

எனினும், எந்த வழிமுறைகள் - செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், உண்மைகள் வெளிவரவேண்டியதும், குற்றவாளிகள் இனங்காணப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டியதும், இனிமேல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதற்கான வழிவகைகளைக் காண்பதுவுமே மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகளாக அமைய வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகின்றேன்.

பொதுவாக, அரச பொது நிறுவனங்களில் ஏற்படுகின்ற நட்டங்கள், குறிப்பாக 2010ம் ஆண்டு முதற்கொண்டு எமது வரவு – செலவுத் திட்டத்தில் மிகப் பாரிய அளவிலான சுமையாகவே தென்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது. இதன் பிரதிபலனாக அரச வங்கிகளின் இருப்பு நிலையில் தளம்பல் நிலை ஏற்படுவதன் ஊடாக, பொருளாதார வளர்ச்சி நிலையில் விசாலமான பின்னடைவுகள் உருவாகியுள்ளன.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அரச நிறுவனங்களின் உரிமை மற்றும் அவற்றின் மேலாண்மை ஆகியன மக்கள் நலன்களையும், நாட்டினது இறைமையையும் பாதுகாக்கும் என்ற வகையிலேயே அரசு அவற்றை தன் கீழ் கொண்டுள்ளது. எனினும், இவற்றின் ஊடான மக்கள் நலன்கள் எத்தகையவை என்ற கேள்வியை எம் மத்தியில் உருவாக்கும் வகையிலேயே இந்த கோப் குழுவின் அறிக்கையை நாம் கொள்ள வேண்டியிருக்கிறது.

1977ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு காலப்பகுதியில் எமது நாட்டில் மக்கள் போக்குவரத்து, பொருள் மற்றும் சேவைகளை வழங்கிவந்த பல நிறுவனங்கள் தனியார்மயமாக்கலுக்கு உட்பட்டுள்ளன. அதன் பின்னரான காலகட்டத்தில் தனியார்மய செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்த சூழலில், அரசுக்கு சொந்தமான தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வந்த பல நிறுவனங்கள், பல்வேறு காரணங்களால் இழப்புகளையே பாரியளவில் சந்தித்து வருகின்றன. இந்த நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் இதுவும் பாரிய தாக்கத்தைச் செலுத்தி வருவதனையே இந்த நிலைப்பாடு உணர்த்தி வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

2007ம் ஆண்டின் இலங்கை கம்பனிகள், நிறுவனங்களின் 7ம் பிரிவு சட்டத்தின் கீழ் 81 பொது நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமானவையாக பதிவு செய்யப்பட்டன. இந்த அரச நிறுவனங்களின் 2014ம் ஆண்டுக்கான தரவுகளைப் பார்க்கின்றபோது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்ற நிறுவனங்களின் மொத்த வருவாய், கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த 294 நிறுவனங்களது வருவாயைவிட அதிகமாக இருந்ததை அறிய முடிகின்றது. அதாவது, இந்த அரச நிறுவனங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 17.2 சதவீதமான பங்களிப்பினைச் செய்துள்ளன.

ஆனால், இன்றைய நிலையில் அரச நிறுவனங்களில் இழப்புகளையே நாம் பதிவு செய்து கொண்டிருக்கிற ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான இழப்புகளை ஈடுசெய்வதற்காக எமது மக்களின் மீது மிகவும் அதிகரித்த நேரடி மற்றும் மறைமுக வரிகளை விதிக்கும் நிலையும் இன்று தோற்றுவிக்கப்பட்டள்ளது. இது மிகவும் வேதனைக்குரிய நிலைப்பாடாகும்.

எனவே, இவ்வாறான நிறுவனங்கள் நட்டமடையக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து பார்த்து, அதனை ஈடு செய்யக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், மேலும், மேலும் அவற்றுக்கென நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு வருவதும்கூட அந்த நிறுவனங்களை நட்டத்தின்பால் வளர்க்கும் நிலையையே தோற்றுவித்துள்ளது என்பதை இங்கு அவதானத்துக்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.

அந்த வகையில், தவறான நிர்வாகம், ஊழல், அரசியல் ரீதியிலான குறுக்கீடுகள், செலவு பிரதிபலிப்பு அற்ற விலை நிர்ணயக் கொள்கைகள் போன்றவை தொடர்பில் நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஆனால், இத்தகைய நிறுவனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துகின்ற பல தரப்புக்கள், அவற்றின் அடிப்படை செயற் திறன் பற்றியும், இயலாமைகளைப் பற்றியுமே எடுத்துக் கூறகின்றனவே அன்றி, பாதகமான மேலாண்மை நடைமுறைகள், அரசியல் குறுக்கீடுகள் குறித்து அவதானங்களைச் செலுத்துவதாக இல்லை.

கௌரவ சபாநாயகர் அவர்களே!

அரச நிறுவனங்கள் தொடர்பிலான நீடித்த கொள்கை செயலாக்கம் இன்மை என்ற அடிப்படை குறித்து நாம் அதிக அக்கறை கொண்டு ஆராய்ந்தால், அது தொடர்பிலான உரியதொரு பொறிமுறைக்கு வரக்கூடியதாக இருக்கும். எனவே, இதனை விடுத்து, நாம் வேறு நியாயங்களைத் தேடிக் கொண்டிருப்போமேயானால், எமது வரவு – செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை  தொடர்வதை தவிர்க்க முடியாது. 

எனவே, மேற்படி அரச நிறுவனங்கள் தொடர்பிலான நீடித்த கொள்கை செயலாக்கம் என்பதே முக்கியத் தேவையாக இருக்கிறது. இதனைவிடுத்து, மேற்படி நிறுவனங்கள் தொடர்பிலான இலகு, மாற்று நடவடிக்கை என்ற நிலையிலும், அரசின் பொதுக் கடன் பெறுவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கின்ற உறுதியான போக்கு என்ற நிலையிலும் இருப்பின், அரச நிறுவனங்களை  விற்பதானது வேறு வழியின்றிய ஒரு நிலைப்பாடாகவே அமைகிறது.

ஆயினும், இங்கு ஒரு முக்கியமான முரண் நிலையை நாம் அவதானத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, அரச நிறுவனங்களை விற்பது என்பது ஒரு முறை வரக்கூடிய வருமானமே அன்றி, வரி வருமானம் போன்றதல்ல. எனவே, இந்த வருமானம் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு முடிவை எட்டிவிடக்கூடும்.

எனவே, அரச நிறுவனங்களை விற்பது என்பது, கடன் பெறுவதன் ஊடாக அதிகரித்து வருகின்ற கடன் பளுவிலிருந்து அரசு தன்னைக் காத்துக் கொள்ள உதவலாம். அதே நேரம், வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு அரச நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவது சரியான நடவடிக்கைதானா? என்பது குறித்து மீள் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அரச நிறுவனங்களைப் வாங்குகின்ற தனியார், அவற்றின் இலாப நோக்கத்தை இலக்காகக் கொண்டே அவற்றை முன்னெடுப்பார்களே அன்றி அரசின் பொது படு கடன் பற்றிய அக்கறை அவர்களுக்கு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது.

இந்த நிலையில், அரச நிறுவனங்களின் நட்டங்கள் மற்றும் தனியார்த்துறைக்கு அவற்றை விற்பதன் மூலமான பாதிப்புகள் என்பவற்றை நோக்குகின்ற நிலையில், இவ்வாறான இரு துறை சார் நட்டங்களிலிருந்து மீளக் கூடிய வகையில், அரசு சார்ந்தும் - பொது மக்கள் சார்ந்தும் நன்மை பயக்கத்தக்க வகையிலான அரச – தனியார் கூட்டு வர்த்தக முயற்சிகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்த முடியும் என்ற எனது கருத்தை இங்கு முன்வைக்க விரும்புகின்றேன்.

எனவே, இது தொடர்பில் தெளிவானதும், நிலைத்ததுமான ஒரு கொள்கைக்கு இந்த அரசு வரவேண்டிய கட்டாயம் அவசியமாக உள்ளது. அல்லாதவிடத்து, தாராளமயக் கொள்கையின் அவசரமானது, அரச நிதியில் பாரிய வர்த்தகர்களை மேலும் செல்வந்த ரீதியில் உயர்த்தக் கூடிய நீடில்லா – நேர்மையற்ற ஒரு நிதிக் கொள்கையை மாத்திரமே உருவாக்கிவிடும் நிலைக்கான சாத்தியங்களே அதிகமாகும். 

அதே நேரம், மறுபுறத்தில், இந்த அரச நிறுவனங்களில் இருக்கக்கூடிய ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தரப்பிலான எதிர் விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இங்கு முன்வைக்கப்பட்டுள்ள அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கை தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, தற்போது வரையிலான காலப்பகுதிக்குள் ஏற்பட்டுள்ள இழப்புகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதுடன், இனிவரும் காலங்களில் இழப்புகள் ஏற்படாத வகையிலான தேசிய பொறிமுறை ஒன்று உருவாக்கப்படல் அவசியமாகும் என்பதை இங்க மீண்டும் வலியுறுத்துவதுடன்,

ஊவா மாகாண சபையின் ஊழல்கள் பற்றி இந்தச் சபையில் ஏற்கனவே பிரஸ்தாபிக்கப்பட்டு வருவதைப் போன்று, வடக்கு மாகாண சபையின் ஊழல்கள் தொடர்பிலும் நான் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தச் சபையின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன். 

அந்த வகையில் இரு வேறு ஊழல், மோசடிகள் தொடர்பில் நாம் அவதானத்தைச் செலுத்த வேண்டியுள்ளது.

ஒன்று, 2010ம் ஆண்டு முதற்கொண்டு 2014ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வடக்கில் முன்னெடுக்கப்பட்ட 'நெல்சிப்' திட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் ஆளுந்தரப்பாக இருந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிகள். இதனை விசாரிப்பதாக பொறுப்பேற்ற வடக்கு மாகாண சபை இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எவ்விதமான உறுதிப்பாடுகளும் இல்லை.

இரண்டாவது, வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல், மோசடிகள். இது தொடர்பில் வடக்கு மாகாண சபையின் ஆளுந்தரப்பினரே ஆளுந்தரப்பினர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்த நிலையில், மாகாண முதலமைச்சர் இந்த ஊழல், மோசடிகளை விசாரிப்பதற்கென ஒரு குழுவை அமைத்தார் என ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. எனினும், அது தொடர்பிலும் இதுவரையில் எவ்வித விபரங்களும் வெளியிடப்படவில்லை. அத்துடன், முதலமைச்சர் வசமுள்ள அமைச்சுக்களிலும் ஊழல், மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக ஆளுந்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளபோதிலும், அது தொடர்பிலும் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை.

எனவே இவை தொடர்பிலும் நாம் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்து விடைபெறுகிறேன். நன்றி.

Loading...
  • தேங்காய் எண்ணெயின் நன்மைகள்10.10.2015 - Comments Disabled
  • தகவல் அறியும் சட்டமூலம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!24.06.2016 - Comments Disabled
  • காரைதீவு பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்  சபை நடவடிக்கை நாகரிகங்கள்  தெரியாத ஒருவர் !!19.05.2015 - Comments Disabled
  • குருநாகல மாவட்டத்தில் போட்டியிடுகிறார் மகிந்த?04.07.2015 - Comments Disabled
  • Ravi Can’t Pronounce English Either23.11.2015 - Comments Disabled