Tuesday, 2 October 2018

தம்புள்ளை சந்தையில் குறைந்த விலையில் மரக்கறி விற்பனை – விவசாயிகள் திண்டாட்டம்

தம்புள்ளை பொருளாதார மத்திய சந்தையில் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதால், விவசாயிகள் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

மேற்படி சந்தைக்கு, கடந்த சில நாள்களாகக் கொண்டுவரப்படும் மரக்கறிகளின் தொகை அதிகரித்துள்ளதெனவும், இதனால் மரக்கறிகளின் மொத்த விலை குறைவடைந்துள்ளதெனவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கத்தரிக்காய், பயிற்றங்காய், வெள்ளரிக்காய், கோவா, வட்டாக்காய், கெகிரி, நோக்கோல், முள்ளங்கி, பீட்ரூட், கறி மிளகாய், பச்சை மிளகாய் ஆகிய மரக்கறி வகைகள், கிலோ ஒன்று, 10 ரூபாய் முதல் 30 ரூபாய்க்குள்ளேயே பெற்றுக்கொள்ளப்படுகின்றனவென, விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

தக்காளிப் பயிர்ச்செய்கைக்கூடாக 10 ரூபாயைக்கூட இலாபமாகப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதெனவும், தக்காளிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பாரிய முதலீட்டுடனேயே, மரக்கறிச் செய்கைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் விவசாயிகள், மரக்கறிகளின் சந்தைப் பெறுமதி குறைவடைந்துள்ளதால், தாம் பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Loading...