Monday, 1 October 2018

வடக்கு மாகாணத்திற்கு சிறந்த குடிநீரை வழங்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் - இ.ஜெயசேகரம்

வடக்கு மாகாணத்திற்கு சிறந்த குடிநீரை பெற்றுக்கொள்வதற்கு மத்திய அரசாங்கம் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினரும் யாழ். வர்த்தக சங்கத்தின் உப தலைவருமான இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின்  வடமாகாண சபை உறுப்பினர் இ.ஜெயசேகரனின் பிரமான அடிப்படையிலான நிதி  ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும்

நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் மாணவர்களுக்கான சுத்தாமான குடிநீர் வழங்கல் நிலையம் அங்குரார்ப்பண நிகழ்வும் சிறுவர் தினமும் இன்று நடைபெற்றபோது பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யாழ்.குடாநாட்டில் மக்கள் அதிகமாக வாழும் பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்து செல்கின்றது. அந்தவகையில் எமது இளம் சமுதாயமான மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பாரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நிலத்தடி நீர் மாசடைவதற்கு பல காரணங்கள் உள்ளன. இரசாயனம் கலந்த உர நாசினிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது மேலும் கழிவு நீர் செல்லக்கூடிய பாதாள சாக்கடைத் திட்டம் அமுல்படுத்தப்படாமை போன்றவற்றினால் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது.

இத்தகைய மாசடைந்த நீரை பருகுவதனால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் உருவாகும் நோய்த்தொற்றுக்கள் அதிகரிக்கும் இத்தகைய சூழலில்தான் மாகாண சபையினால் ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடு வேலைத்திட்டங்களுக்கு  இவ்வாறான திட்டத்தை நான் அமுல்படுத்தி வருகின்றேன்.

யாழ்.பிரதேச செயலர் பிரிவில் எட்டுப் பாடசாலைகளைத் தெரிவு செய்து சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கி சுத்தமான குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றேன். இதுவரைக்கும் ஆறு பாடசாலைகளுக்கு இத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேன். ஏனைய இரண்டும் விரைவில் திறந்து வைக்கவுள்ளேன்.

யுத்தத்திற்கு பின்னரான சூழலில் பாரிய தேவைகள் மக்களுக்குச் செய்யவேண்டியுள்ளது. குறிப்பாக குடிநீத்தேவை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதாகவுள்ளது. இதற்கான திட்டங்கள் முழுமையாக இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. மத்திய அரசாங்கம் சிறந்த குடிநீரை எமது மக்கள் பெற்றுக்கொள்வதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வியில் முதலிடத்தில் இருந்தது. இன்று பின்தங்கிய இடத்தில் உள்ளது. இதனை முன்னுக்குக் கொண்டுவரவேண்டியது அனைவருடைய பொறுப்பாகும்.

இன்று சிறுவர் தினம் எதிர்கால தலைவர்களாக வரவேண்டிய இந்த சிறார்கள் சுகாதாரத்திலும் ஆரோக்கியத்திலும் சிறந்தவர்களாக வரவேண்டும் இதற்குப் பாடசாலை சமூகம் சிறந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்.


(எம்.நியூட்டன்)

Loading...