தமிழில் ஏ.எல்.எம்.சத்தார்
“அச்சேவ கிச்சங், ஆதப்பங், கோஜஞ்ஞா மரணங் சுபே!”
“நான் எனது பட்டப்படிப்பின்போது ஒருநாள் பாளி மொழியில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள, சூத்திரம் ஒன்றைப் படித்துக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இச்சூத்திரத்தின் அர்த்தம், “இன்று செய்வன யாவையும் இன்றே செய்திடுவீர்; எதிர்காலம் நிச்சயமற்றதே” என்பதாகும். இதேபோன்றே எங்கள் முகம்மது நபி (ஸல்) அவர்களும், “நாளை செய்வோம் என்று எதனையும் வைத்துக்கொள்ள வேண்டாம்” என்று கூறியுள்ளார்கள்” இவ்வாறு முகம்மத் ஆஸாத் ஸிராஸ் தெரிவித்துள்ளார். இவர் மாதம்பே இஸ்லாஹியா இஸ்லாமிய உயர்கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளராவார்.
மௌலவியான இவர் தமிழ்மொழி மூலமே தனது உயர் கல்வியையும் பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.
சில காலங்களாக பௌத்த – முஸ்லிம் மக்களில் ஒரு சிலரிடையே நிலவிவரும், பகைமை, வெறுப்புணர்வு குறித்து தனது கவலையை வெளியிடும் அஸாத், பௌத்த போதனையையும் கற்க வேண்டும் என்ற உந்துதலால் 2017 ஆம் ஆண்டு இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் இணைந்து பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.
அதன்படி மேற்படி பல்கலைக்கழகத்தில் பௌத்த சமயப் போதனையைக் கற்றுப் பட்டம் பெற்ற முதலாவது முஸ்லிமாக அவர் விளங்குகிறார்.
“இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் கற்பதற்கு உங்களைத் தூண்டிய காரணி என்ன?” என்று பீ.பீ.ஸி. சிங்களமொழி ஊடக சேவை முகம்மது ஆஸாத்திடம் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்;
“இலங்கை முஸ்லிம் – சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக வெறுப்பு, பகைமையுணர்வுகள் உருவாகியுள்ளன. இதனை இல்லாதொழிப்பதற்காக எங்களிடம் போதிய தெளிவு இருக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும். இதனை முன்வைத்தே நான் பௌத்த பட்டப்படிப்பைத் தெரிவுசெய்தேன்” என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது;
“சமயநெறிகளைக் கற்கும்போது அறிவு விருத்தியடைகிறது. அத்துடன் இதர சமயங்கள் குறித்து கற்கும்போது மேலும் சிந்தனை தெளிவு ஏற்படவே செய்கிறது.
இன்று சமூகத்தில், ஏதும் மதத்தையோ, சமயத்தையோ ஊடகங்கள் ஊடாகவேதான் புரிந்துகொள்கிறார்கள். அல்லது குறித்த மதங்களைப் பின்பற்றும் மக்களைப் பார்த்தே புரிந்துகொள்ள முடிகிறது.
ஒரு மதத்தைப் பற்றிப் புரிந்துகொள்வதற்கு அம்மதம் குறித்து படித்துணர வேண்டும். அம்மதத்தின் அடிப்படை வேத நூலைப் படிக்கவேண்டும். அதனைவிடுத்து ஊடகங்கள் மூலமாகவோ அல்லது அம்மதங்களைப் பின்பற்றும் மக்களைப் பார்த்தோ ஒரு வேதம், சமயத்தைப் பற்றி பரந்தளவில் புரிந்துகொள்ள இயலாது.
தமிழ்மொழி மூலம் கல்வி பெற்ற ஒருவரால் சிங்களம் மற்றும் பாளி மொழிகளில் ஏதும் துறையொன்றைக் கற்றுக்கொள்வதென்பது இலேசான காரியமன்று. குறிப்பாகப் பட்டப்படிப்பைத் தொடர்வதென்பது மிகவும் கடினமான சவாலாகும்.
நான் தமிழ்மொழி மூலம் கல்வி பெற்ற போதிலும் நான் மலே இனத்தவன் என்பதால், சிங்களமொழியை சரளமாகப் பேசக்கூடிய ஆற்றல் எனக்குண்டு. ஆனால், எழுதும்போது கடும் சொற்களை நான் அறியேன். அத்துடன் பாளி மொழியில் ஒரு சில விடயங்களைப் படிக்கும்போது பெரும் சவால்களை எதிர்நோக்கியதுமுண்டு.
ஆனாலும் எனது வகுப்பிலிருந்த சக மாணவ சகோதர, சகோதரிகள் எனக்கு உறுதுணையாக அமைந்தார்கள். விசேடமாகப் பிக்கு மாணவர்கள் எனக்கு நன்கு தைரியமூட்டினார்கள். பல வழிகளிலும் ஒத்துழைப்புத் தந்தார்கள். பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் எனது விடயத்தில் நன்கு கரிசனை காட்டினார்கள்.
நான் பௌத்த சமயத்தைப் படிக்கும்போது அதன் வழிமுறைகளுடன் இஸ்லாமிய வழிமுறைகளும் உடன்படும் பல முன்மாதிரிகளை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.
சமாதானம், சகவாழ்வு, அன்பு, கருணை போன்ற பல பண்புகளோடு இரு சமயங்களும் ஒன்றிப்போவதைக் குறிப்பிடலாம்.
எல்லைக்கோட்டுக்குள் வரையறுக்கப்படாது, அதனின்றும் வெளியே சென்று சிந்திக்கும் பரந்த மனமே எமக்கு வேண்டும். முஸ்லிம் என்ற வகையில் எனக்குள் ஒரு சில வரையறைகளை வைத்துக்கொண்டுதான் இதர மதங்களை நோக்குகிறேன். இதற்கும் அப்பால் சென்றே எமது பார்வையை செலுத்தவேண்டும். இது மிகவும் இலகுவான காரியமல்ல. இதற்காகப் பரந்த மனமொன்று வேண்டும்.
சகல சமயங்களுக்கும் பொதுவான பெறுமதிமிக்க கட்டுகோப்பொன்று உள்ளது. அதனை அனைவரும் பொதுவாகப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருக்கவே செய்கிறது. பொதுவாகப் பகிர்ந்து சீர்செய்து கொள்ளக்கூடிய அந்த காரணியை இனம்காட்டுவதே எனது குறிக்கோளாகும்.
இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற பட்டதாரி பரீட்சையில் நான் சித்தியடைந்ததாக கடந்த ஜூலை மாதம் வெளியான பெறுபேற்று அறிக்கையில் தெரிய வந்தது. அதனை கண்டு மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன். இந்த பரீட்சை வெற்றியோடு நான் இதன்மூலம் பெற்ற தெளிவினை முஸ்லிம் சமூகத்திற்குப் பெற்றுக்கொடுப்பதையே எனது முதல் நோக்கமாகக் கொண்டுள்ளேன் என்று ஆஸாத் குறிப்பிட்டார்.
புத்த சமயம் போன்று, இஸ்லாம் சமயத்தை ஏனைய மதத்தினரும் படித்துக்கொள்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளதா என்று பீ.பீ.ஸி. வினா எழுப்பியபோது.
அதற்கு எந்த விதத்திலும் தடைகள் இல்லை. ஆனாலும் எங்கள் நாட்டில் அதற்கான வாய்ப்புகள் குறைவு. நீங்கள் பௌத்த சமயத்தை கற்றுக்கொண்டது போன்று, எங்களாலும் இஸ்லாம் சமயத்தை கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் உள்ளனவா? என்று எனது நண்பர்கள் என்னிடம் வினவுகிறார்கள். அவ்வாறு இல்லையென்று சொல்வதற்கில்லை. ஆனால் அது அதிகரிக்கப்பட வேண்டும்” என்று ஆஸாத் தனது உரையாடலை நிறைவு செய்தார்.
தொடர்ந்து ஆஸாத் படித்து பட்டம் பெற்ற, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கல்லேல்லே சுமனசிறி தேரரை, முகம்மது அஸாத் பட்டம் பெற்றமை குறித்து பீ.பீ.ஸி வினவியபோது, தேரர் கூறியதாவது; “எமது பல்கலைக்கழகத்தில் பௌத்த சமய பட்டப்படிப்பில் பட்டம் பெற்ற முதலாவது முஸ்லிம் இவர்தான். நாம் அனைவரும் சகல மதங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மதங்கள் குறித்தும் போதிய தெளிவில்லாமையாலேதான் தேவையற்ற பிரச்சினைகள் தலை தூக்குகின்றன. இதற்கு முன்னர், கிறிஸ்தவ பாதிரிகள், தமிழர்கள், இந்த பௌத்த பாடநெறியைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம் ஒருவர் இதுவே முதற்தடவையாகக் கற்றுத்தேறியுள்ளார்.
இலங்கையைப் போன்றே உலகில் மதங்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மதங்கள் பற்றியும் புரிந்து கொள்ளாமையாலேதான் மோதல்கள் ஏற்படுகின்றன. எனவே அடிப்படை கல்வி தகைமையுள்ள எந்த இனத்தவர்களும் பௌத்த கல்வியைப் பெற்றுத் தேர்வதற்கு இலங்கை பௌத்த, பாளி பல்கலைக்கழகம் எப்போதும் கதவினை திறந்தே வைத்திருக்கிறது” என்று தேரர் கூறினார்.
நன்றி: பீ.பீ.சி சிங்களம்
-VIdivelli