Wednesday, 20 May 2015

கவிதை : ஓர் ஊமையின் பாடல்!



புரிதல்களின்மையின் 

ஏக்கத்தோடு

மருண்டு போகிறது

என் இதயப் பறவை..

கணத்துக்குக் கணம்

பணம் பார்த்து

குணம் மாறும்

மானிடர் கண்டு

சுருக்கிக்கொள்கிறது

அது தன் சிறகை!

வேகமாக

மிகவேகமாக

கடந்து செல்லும் 

மனிதர்களின்

முகம் பார்த்து

துயரங்கள்

மீள்சுழற்சியாகின்றன..

செயற்கையாகிப்போன

புன்னகையைக் கண்டு

தாழ்வுணர்ச்சிகள் நீள்கின்றன!

விரக்தியின் 

உச்சப் படியில் நின்று கதறி 

சோகமாய் முகாரி இசைக்கிறது

என் இயலாமை!

இறுதியாய்

வெட்கத்தோடும் 

ஏமாற்றத்தோடும்

அவமானப்பட்டு

தலைகுனிகிறது

என் மனிதாபிமானம்!!!

-வெலிகம ரிம்ஸா முஹம்மத்
Loading...