உயிரோடு மாமாவை நாய்க்கு தின்ன போட்ட மருமகனின் உலகை அதிரவைத்த அடுத்த அதிர்ச்சி சம்பவம்
உண்மையா , பொய்யா ? வடகொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் விமான எதிர்ப்பு பீரங்கிக் குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். வட கொரியத் தலைவர் கிம் ஜாங் அன்னின் மாமா நாய்களுக்கு இரையாக்கப்பட்டார். இது போன்ற வட கொரிய மரண தண்டனைச் செய்திகள் எந்த அளவுக்கு நம்பக்கூடியவை ?
விமான எதிர்ப்பு பீரங்கிக் குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வட கொரியப் பாதுகாப்பு அமைச்சர் வட கொரியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் யொங் சோல் நாட்டின் தலைவரும் சர்வாதிகாரியுமான கிம் ஜாங் அன்னுக்கு விசுவாசமற்றவகையில் நடந்து கொண்டார் என்பதற்காக அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதாக, தென் கொரியாவின் தேசிய உளவு நிறுவனம் ( என்.ஐ.எஸ்) தென் கொரிய நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது.
கிம் ஜாங் அன் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ஹ்வோன் தூங்கிவிட்டார் என்பதற்காக, அவரை பொதுமக்கள் பார்க்க, விமான எதிர்ப்பு பீரங்கிக் குண்டுகளால் சுட்டுக்கொன்றனர் என்று தென் கொரியாவின் யொன்ஹப் செய்தி நிறுவனம் கூறுகிறது.
இதில் எந்த அளவு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. எதையும் ரகசியமாக வைத்திருக்கும் இரும்புத்திரை நாடான வட கொரியாவிலிருந்து வரும் எந்தச் செய்திகளுமே பக்கசார்பற்ற வகையில் உறுதிப்படுத்த முடியாதவை — மரண தண்டனை நிறைவேற்றல் குறித்த பல செய்திகள் உட்பட.
இது வரை வந்த செய்தி என்ன ?
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் அன்னின் மாமா சாங்
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, கிம் ஜாங் அன் பல உயர் அதிகாரிகள் உட்பட 15 பேருக்கு மரண தண்டனை விதித்திருக்கிறார் என்று செய்திகள் கூறின. அவரது கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு துணை அமைச்சர்கள் மற்றும் ஒரு இசைக்குழுவின் உறுப்பினர்கள் என பலர் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்று தென் கொரிய உளவு நிறுவன அதிகாரிகள் கூறினர்.
இதற்கு முன்னர் 2013ம் ஆண்டில், கிம் ஜாங் அன், அவரது மிகச் செல்வாக்கு படைத்த மாமா சாங் சோங் தேக்கை துரோகக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதித்துக் கொன்றார். சாங் , மறைந்த தலைவர் கிம் ஜாங் இல்லின் சகோதரியின் கணவர். கிம் ஜாங் அன் 2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு ஆட்சி முறைகளைக் கற்றுத்தந்தவர் இவர். மொத்தமாக கிம் ஜாங் இல் 2011ல் இறந்ததிலிருந்து இதுவரை சுமார் 70 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று தென் கொரிய உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.
ஏமாற்றுச் செய்திகள்
வட கொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் அன் ஆனால், சில மரண தண்டனை விதிப்புகள் குறித்த செய்திகள் புனையப்பட்டவைதான்.
ஹ்யோன் சோங் வோல்லின் மரண தண்டனை குறித்த செய்தி இதற்கு ஒரு உதாரணம். இவர் முன்னாள் பாடகர் மற்றும் கிம் ஜாங் அன்னின் முன்னாள் காதலியாகவும் இருந்திருக்கலாம். ஹ்யோனும் அவருடன் சேர்ந்து 11 இசைக் கலைஞர்களும் ஒரு பாலியல் ஒளி நாடாவை உருவாக்கினார்கள் அப்போது பிடிபட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டனர் என்று தென் கொரிய செய்திகள் கூறின. சிலர் அவர்கள் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறினர். வட கொரியா இந்த செய்திகளை மறுத்தது. அடுத்த ஆண்டில் ஹ்யோன் அரச தொலைக்காட்சியில் தோன்றினார். அவர் நன்றாகவே காணப்பட்டார்.
மற்றுமொரு பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி என்பது, கிம் ஜாங் அன் அவரது மாமாவை, பட்டினி போடபட்ட நாய்களுக்கு விருந்தாக உயிருடன் கொடுத்தார் என்பது. இந்த செய்தியின் மூலம் ஒரு அநாமதேய சீன வலைப்பூ தளம் என்பதை பிபிசி பின்னர் கண்டறிந்தது. இந்த வலைப்பூதளம் ஏதோ வெகு நம்பகமான செய்தி மூலமாகக் காட்டப்பட்டது. பரவலாக ஊடகங்களிலும் இது செய்தியானது.
உண்மையா , பொய்யா?
ஹ்யோன் யோங் சோல் வட கொரியா குறித்த செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. ஏனென்றால் அங்கிருந்து மிகவும் சொற்பமான தகவல்களே வருகின்றன. நமக்குக் கிடைப்பதெல்லாம், தென்கொரியாவின் உளவுச் செய்தி நிறுவனங்களிடமிருந்து வருவதுதான். அவர்களுக்கே பல்வேறு விதமான உள்நோக்கங்கள் இருக்கின்றன.
பாதுகாப்பு அமைச்சரின் மரண தண்டனை குறித்த வதந்தியைப் பற்றி நிச்சயமாக இப்போது சொல்வது கடினம் என்றாலும், இது உண்மையாகவும் இருக்கலாம் என்கிறார் வட கொரியாவில் பிரிட்டிஷ் கான்சல் ஜெனெரலாகப் பணி புரிந்த ஜேம்ஸ் ஹோர். ஆனால் அந்த நாட்டிலிருந்து வரும் செய்திகள் குறித்து பொதுவாக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்கிறார் பிபிசி செய்தியாளர் ஒருவர். "வட கொரியா என்று வந்துவிட்டால், நாம் நமது மிக மோசமான கற்பனைகளை நம்பத்தயாராக இருக்கிறோம், அதை நாமே நம்பாவிட்டால் கூட " , என்கிறார் பிபிசி செய்தியாளர் ஜான் சட்வொர்த். ஆனாலும் வட கொரியா ஒரு இருண்ட, ரகசியமான இடம்தான் என்றும் அவர் கூறுகிறார்