Tuesday, 5 May 2015

அதிசயத்தை ஒளியால் பேசிக்கொள்ளுதல்

Anar Issath Rehana

அனார் இஸ்ஸத்  ரெஹனா  


அந்தரங்கத் தவிப்பின் அழுகையொலியூடாக

சிக்கலான வளைவுகளில் நடந்து போகிறேன்
நள்ளிரவில் 'தலதா மாளிகை' நெடுஞ்சாலை வழியாக
சாலையோரம் பழமையான காட்டு மரங்களின்
மூச்சிரப்பைக் கேட்டபடி ...
வெண்ணிறப் பூக்கல்லுகளின் நீள் வரிசைக்கு தாழ்வாய்
பனி ஊறிய வீதி
மெல்லிய குளிரில் ஒடுங்கி தியானத்திலிருக்கிறது
நடுநிசியின் நிதானத்தை ஊடறுத்தவர்களாகச் செல்லும்
'பிக்குகள்' இருவரின் நடையில்
சீரான செம்போர்வை ஒளிர்கின்றது
எவ்வித சலனங்களுமின்றி
குளத்தின் மேற்பரப்பில்
தெரு மின்விளக்குள் உடல்களை நீரில் நனையவிட்டு
மீன்களைப்போல் நடித்துப் பார்க்கின்றன
மௌனம் கருமையாய் திரண்ட உயர்ந்தமலைப் பிராந்தியம்
இருட்டு நடுவில் பிளந்து 
வாளெனச் சுடர்கிறது காட்டுத் தீ
மலைச் சரிவில் நீண்ட ஒளிக் கோடாகி
பாயும் தீ நதியில் தோன்றுகிறாள் 
பெண்ணரசி யசோதரா
சொல்லிக்கொள்ளாமல் 
சித்தார்த்தன் ஓடிப்போன அந்நாளில்
வியாபகமாய் நிதானமாய் வெளிப்பட்ட 
அதே புன்னகையோடு
கண்டி மலையருவிகளின் சிணுக்கங்களுடன் வரும்
முதல் பனிக் காற்றினுள் 
யசோதராவின் விரல்களின் தொடுகையை
தசைகளில் நீண்ட நேரம் உணர்ந்திருந்தேன்
பயந்த பறவைக்கு வலிமையளிக்கின்ற தன்மையானதாக
மலைக்காடுகள் பூராக அறிவித்துக் கொண்டிருக்கின்றன
மலைப்பூட்டும் வெற்றியின் செய்தியை
அதிசயத்தை ஒளியால் பேசிக் கொள்ளும் மின்மினிகள்

Loading...