Tuesday, 5 May 2015

கவிதைக்குள் மறையும் மழைக்காடுகள்

Anar Issath Rehana
அனார் இஸ்ஸத்  ரெஹனா


என் கவிதைகளுக்குள்
மழைக்காடுகள் புதைந்துள்ளன
தீப்பிழம்புகள்கொண்ட வானம்
காட்டின் இருளில் புதைந்துள்ளது
மழை சிணு சிணுக்கும்
மென்மையான இரவின் கீழே
உன்னைப் புதைத்துக்கொள்

தகிப்பும் மழையும்
ஆர்ப்பரிக்கின்ற காடுமுழுக்க
மந்திரித்துவிடப்பட்ட விலங்குகள்
உள் அழைக்கின்ற கண்களால்
பின் வாங்குகின்றன


மழையும் சுவையும்

காற்றின் ஆழ்ந்த பசியும்
சதுப்பு நிலத்தில் உலவுகின்றன
அங்கே
மேயும் கபில நிறக்குதிரை
தொழுவம் அடையும் நேரம்

மஞ்சள் அலரிப்பூக்களை
மடியில் சேர்த்தெடுப்பவள்
எஞ்சிய உன் கண் சிமிட்டலையும்
எடுத்துப்போகிறாள்

வெது வெதுப்பான மழைக்காடாக
உருக்கொள்கின்றன என் கவிதைகள்

Loading...