ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் சிங்கங்கள்
ருவாண்டாவில் இனப்படுகொலையோடு சிங்கங்களும் ஒழிந்தன
ருவாண்டாவில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துபோன சிங்கங்கள் முதல்தடவையாக நாட்டுக்கு கொண்டுவரப்படுவதாக வனவிலங்குத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
அங்கு 1994-ம் ஆண்டு நடந்த இனப் படுகொலைக்குப் பின்னர், சிங்கங்களும் ஒழிந்து போயின. இரண்டு ஆண் சிங்கங்களும் ஐந்து பெண் சிங்கங்களும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திங்களன்று விமானம் மூலம் கொண்டு வரப்படுகின்றன. இந்த சிங்கங்கள் அக்காகேரா தேசிய வனப்ப குதிக்குள் விடப்படும். நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் முயற்சியின் முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இந்த சிங்கங்கள் மீள்-அறிமுகத்தை அதிகாரிகள் வர்ணித்துள்ளனர். இனப் படுகொலைக்குப் பின்னர், இடம் பெயர்ந்த பெருமளவிலான மக்கள் இந்த வனப் பகுதிக்குள் குடியேறினர். இதனால், மக்கள் தங்களின் கால்நடைகளை பாதுகாப்பதற்காக சிங்கங்களை அங்கிருந்து விரட்டி விட்டனர். அல்லது கொன்று விட்டனர்.