இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக்கான ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் விசாரணைக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் இன்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் காணாமல்போனவர்கள் பற்றிய விசாரணைக்காக, ஆணைக்குழுவின் அமர்வு மூதூர் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை இந்த ஆர்பாட்டமும் நடைபெற்றது.
பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட காணாமல்போனவர்களின் உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள்.
'உள்நாட்டு விசாரணைகளில் நம்பிக்கையில்லை. சர்வதேச விசாரணையே தேவை' என வலியுறுத்தும் வகையிலான பதாகைகளையும் வாசக அட்டைகளையும் அவர்கள் வைத்திருந்தனர்.
நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவொரு உள்நாட்டு விசாரணையிலும் நம்பிக்கை வைக்க முடியாது என்கின்றார் திருகோணமலை மாவட்ட காணாமல்-ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தின் செயலாளரான ஜெ. நாகேந்திரன்.
காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகள் பற்றிய உண்மை நிலையை சர்வதேச விசாரணை ஒன்றின் மூலமே அறிய முடியும் என்றும் அவர் கூறுகின்றார்.
உள்நாட்டு விசாரணையில் சர்வதேச பிரதிநிதித்துவம் இருக்குமானால் தாங்கள் சாட்சியமளிக்க தயார் என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் குறிப்பிட்டார்.
ஆணைக்குழுவின் விசாரணைக்கு எதிராக ஆர்பாட்டம் நடந்தாலும் இன்றைய முதல் நாள் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது.
விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த முறைப்பாட்டாளர்களில் பெரும்பாலானோர் வருகைதந்து சாட்சியங்களை பதிவு செய்ததாக ஆணைக்குழு கூறுகின்றது.
இன்றைய அமர்வின் போது 159 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதோடு 168 புதிய முறைப்பாடுகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளரான எச். டப்ளியு குணதாஸ கூறுகின்றார்.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள 10 பிரதேச செயலக பிரிவுகளிலிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை இடம்பெறும் விசாரணைகளுக்கு 677 பேர் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.