Wednesday, 17 June 2015

அமெரிக்காவின் தாக்குதலில் பின்லேடனின் செயலாளர் அல்கொய்தா தலைவர் பலி!

சனா: ஏமனில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில்  பின்லேடனின் செயலாளராகப் பணியாற்றிய அல்கொய்தா தலைவர் பலியானர். 

உள்நாட்டுப்போர் நடந்து வரும் ஏமன் நாட்டை சேர்ந்தவர், நாசர் அல் உஹாய்ஷி. 38 வயதான இவர் அரேபிய தீபகற்ப பகுதியில் ஏமனில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவனாகத் திகழ்ந்து வந்தார். ஆப்கானிஸ்தானில் ஒசாமா பின்லேடனின் செயலாளராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவும், ஏமனும் தேடப்படும் குற்றவாளியாக இவரை அறிவித்திருந்தன. இவருடைய தலைக்கு அமெரிக்கா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 மில்லியன் டாலர் (சுமார் ரூ.64 கோடி) விலை அறிவித்தது. 

ஆப்கானிஸ்தானை விட்டு 2001–ம் ஆண்டு வெளியேறிய இவரை உடனடியாக ஈரான் கைது செய்து, ஏமனிடம் ஒப்படைத்தது. பின்னர் அவர்  அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் 2006 ஆம் ஆண்டு, சனாவில் உள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து, மேலும் 22 கைதிகளுடன் இவர் தப்பி விட்டார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஏமனில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நடத்திய அதிரடி தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக ஏமன் அதிகாரிகள் உறுதி செய்தனர். இது தொடர்பான செய்தியை ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையும்  வெளியிட்டுள்ளது.  அதில், ‘இந்த ஆண்டு கொல்லப்பட்ட அல்கொய்தா இயக்கத்தின் 6 ஆவது முன்னணி தலைவன் நாசர் அல்  உஹாய்ஷி’ என்று கூறப்பட்டுள்ளது. 


நாசர் அல்  உஹாய்ஷி கொல்லப்பட்டு விட்டதை அல்கொய்தா இயக்கத்தின் அரேபிய தீபகற்ப குழு, ஆன்லைன் வீடியோவில் உறுதி செய்துள்ளது. அதில், ‘‘அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நாசர் அல்  உஹாய்ஷி கொல்லப்பட்டு விட்டார். அவருடன் மேலும் 2 போராளிகள் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது ஆன்மா அமைதி பெறட்டும். அரேபிய தீபகற்ப பகுதியில் நாம் துக்கம் அனுசரிப்போம்’’ என கூறப்பட்டுள்ளது. மேலும், நாசர் அல்  உஹாய்ஷியின் இடத்துக்கு காசிம் அல் ரேமி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

ஏமனில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகத் திகழ்ந்தவர், 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நாசர் அல்  உஹாய்ஷி அந்தப் பதவிக்கு வந்தார். இப்போது அவரும் அதே அமெரிக்க தாக்குதலில் பலியாகி இருப்பது அல்கொய்தா இயக்கத்துக்கு பலத்த பின்னடைவாக அந்த இயக்கத்தவர்களால் கருதப்படுவதாகக் கூறப்படுகிறது.
Loading...