உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட வேண்டும் என இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் வலியுறுத்தி உள்ளார்.
ஜெனிவாவில் இன்று தொடங்கியுள்ள ஐ.நா மனித உரிமை அமைப்பின் 29 வது கூட்டத் தொடரில் உரையாற்றிய ஐ.நா மனித உரிமை அமைப்பின் ஆணையர் செயிட் ராட் அல்ஹீசேன், "இலங்கை தொடர்பிலான ஐ.நா.வின் போர்க்குற்ற விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இலங்கையின் புதிய அரசு கொண்டுவந்துள்ள 19வது சட்டதிருத்தம் நல்லாட்சிக்கு வழிவகுக்கும் என நம்புகிறேன். வெளிப்படைத்தன்மையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டும். ஐ.நா தொடர்ந்து இதற்கான உதவிகளை வழங்கும்.
இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நா அமைப்பினால் வெளியிடப்படுவதற்கு முன்னர், இலங்கை அரசின் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.
