2590 பயிலுநர் பட்டதாரிகள் கடமைப் பொறுப்பேற்பு
தொழில் வாய்ப்பின்றி இருந்த பட்டதாரிகளில் பயிற்சியில் இணைத்துக் கொள்ளப்பட்ட 2590 பேர் இன்று (திங்கட்கிழமை) அரசாங்க அலுவலகங்களில் கடமைப் பொறுப்பேற்றுள்ளதாக பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்பற்ற பட்டதாரிகளாக இருந்த 466 பேருக்கு பட்டதாரிப் பயிலுநர் நியமனக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றதையடுத்து அவர்கள் கிழக்கு மாகாணத்திலும், மாகாணத்திற்கு வெளியேயும் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பிலிருந்து 242 பேரும், அம்பாறையிலிருந்து 169 பேரும், திருகோணமலையிலிருந்து 55 பேருமாக மொத்தம் 466 பேர் கிழக்கு மாகாணத்திலிருந்து பயிலுநர் பட்டதாரிகளாக நியமனம் பெற்றுள்ளனர்.
கடந்த வருடம் ஜுலை மாதம் 09 ஆம் திகதி அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைவாக நாடளாவிய ரீதியில் தொழில் வாய்ப்பற்றிந்த 2590 பட்டதாரிகளுக்கு கடந்த 12.01.2016 அன்று அலரிமாளிகையில் வைத்து பிரதமரினால் பயிற்சிக்கான இணைப்புக் கடிதம் வழங்கட்டமை குறிப்பிடத்தக்கது.