சீனாவின் முன்முயற்சியால் உருவாக்கப்படும், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிப் பிரகடனத்தில் இலங்கை இன்று கையெழுத்திட்டுள்ளது. பீஜிங்கில் நடந்த நிகழ்வில், இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கும் பிரகடன ஆவணத்தில், கையெழுத்திடும் இந்த நிகழ்வில், இதன் நிறுவக நாடுகளான 57 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இலங்கை உள்ளிட்ட 50 நாடுகள் இந்தப் பிரகடனத்தில் இன்று கையெழுத்திட்டன. அவுஸ்ரேலியா முதல் நாடாக இந்த பிரகடன ஆவணத்தில் கையெழுத்திட்டது.
எஞ்சிய ஏழு நாடுகளும், இந்த ஆண்டு இறுதிக்குள் பிரகடனத்தில் கையெழுத்திடவுள்ளன.
மேற்குலக நாடுகளின் கையில் உள்ள உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, அனைத்துலக நாணய நிதியம் ஆகியவற்றுக்கு போட்டியாக சீனா இந்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியை உருவாக்கியுள்ளது.
