பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டங்களை கொண்டு வரப்போவதாக ஆஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இரட்டைக் குடியுரிமை கொண்டுள்ளவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களது ஆஸ்திரேலியக் குடியுரிமையை இரத்துச் செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுபவர்கள் நாட்டினுள் நுழைய முடியாது என ஆஸ்திரேலியா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் பயங்கரவாதிகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் 120 ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் இரத்துச் செய்யப்படும் என ஆஸ்திரேலியப் பிரதமர் டொனி அபோர்ட் இன்று தெரிவித்துள்ளார்.
இரட்டைக் குடியுரிமை வைத்துள்ளவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ அல்லது பயங்கரவாதக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டாலோ, அவர்களது ஆஸ்திரேலியக் குடியுரிமை தானாகவே ரத்து செய்யப்படும் வகையில் 2007ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆஸ்திரேலியக் குடியுரிமைச் சட்ட த்தில் மாறுதல் கொண்டுவரப்படும் எனவும் பிரதமர் அபாட் வலியுறுத்தியுள்ளார்.
பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான ஆஸ்த்திரேலிய குடியுரிமைச் சட்டத்திலான இந்த மாற்றங்கள் புதன்கிழமை ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த நடவடிக்கைகள் அரசியல் சாசனத்திற்கு முரணானது என சட்ட வல்லுனர்கள் பலரும் வாதிட்டு வந்திருந்தனர். இந்த நிலையிலேயே இந்தப் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அரசு கொண்டுவரவுள்ள புதிய சட்டம் முன் தேதியிட்டு இருக்க வேண்டுமா என்பது குறித்து புலனாய்வு மற்றும் பாதுகாப்பு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
