Tuesday, 23 June 2015

உழைப்புக்கேற்ப ஊதியமென்ற யோசனை நிராகரிப்பு

இலங்கையில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்கு பதிலாக உழைப்புக்கேற்ப ஊதியம் என முதலாளிமார் சம்மேளனத்தினால் முன் வைக்கப்பட்ட யோசனையை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளன.
null
இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டம்
இந்த யோசனை நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை கூட்டு ஓப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிமார் சம்மேளத்திற்குமிடையில் நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் இன்றி முடிவடைந்துள்ளது.
இரு தரப்புக்குமிடையிலான கூட்டு ஓப்பந்த்தின் பிரகாரம் தற்போது நாள் சம்பளமாக ரூபா 620 வழங்கப்படுகின்றது. இரு வருடங்களுக்கான அந்த ஓப்பந்தம் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துள்ள நிலையில் ஏப்ரல் மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும்.நாளாந்த சம்பளம் ரூபா 1000 ஆக அதிகரிக்க வேண்டும் என தொழிற்சங்களினால் போராட்டங்களும் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சி, உலக சந்தையில் சந்தைப்படுத்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்ற காரணங்கள் கூறி இந்த அதிகரிப்பு சாத்தியப்படாது என ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலாக உழைப்புக்கேற்ப ஊதியம் என முதலாளிமார் சமமேளனம் யோசனையொன்றை முன் வைத்த போது அதனை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டதாக இ. தொ. கா தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
நாளாந்த சம்பள அதிகரிப்பு கோரும் தொழிலாளர்களுக்கு உழைப்புக்கான ஊதியம் என முதலாளிமார் சம்மேளனம் முன் வைத்திருந்த யோசனையை தொழிற்சங்கங்கள் நிராகரித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயம் என மலையகத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பெ. முத்துலிங்கம் கூறுகின்றார்.
தேயிலை கம்பனிகளை பொறுத்தவரை நஷ்டதத்தை எதிர்நோக்குவதாக கூறுவது வழமையானது என்றும் தெரிவிக்கும் அவர் தோட்ட நிர்வாகத்தினர் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
வருடந்தின் முற்பகுதியில் அதிக கொழுந்து பறிக்க முடியாத நிலையில் உழைப்புக்கேற்ப ஊதியம் என்பது எந்தவகையில் பொருந்தும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Loading...