பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டுவந்து இருகட்சி அரசியலை ஏற்படுத்தும் யோசனைகளை ஐ.தே.க. ஏற்காது என சிறிய, மற்றும் சிறுபான்மைக் கட்சிப் பிரதிநிதிகளிடம் இன்று உறுதியளித்தர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அலரிமாளிகையில் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மேலும் , நாடாளுமன்றத்தில் இந்த யோசனைகள் கொண்டு வரப்படும் போது ஐ.தே.க அதை எதிர்க்கும். உடன்பாடுகள் எட்ட முடியாவிட்டால் உடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று கோரும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
தமக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து முக்கியமான பிரச்சினைகள் திசை திருப்பப்படுகின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சந்திப்பில் அரசியல் கட்சி தலைவர்கள் சம்பந்தன், ரவுப் ஹக்கீம், மனோ கணேசன், அனுர குமார திசாநாயக்க மற்றும் சுமந்திரன், லால் காந்த ஆகியோர் கலந்துகொண்டனர்
இதனையடுத்து சந்திப்பு குறித்து மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில்,
பிரதமரிடம் நாம் அனைவரும் எமது சிறு மற்றும் சிறுபான்மை பேரவையின் ஒருமித்த கருத்தை முன்வைத்தோம்.
இப்போது பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டினோம்.
புதிய தேர்தல் முறையானது இந்த நாட்டிலே இருக்கும் பல கட்சி அரசியலை முடிவுக்கு கொண்டு வந்து இரண்டு கட்சி அரசியலுக்கு வழி காட்டுகின்றது.
இந்த அபாயத்தை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இதை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது. இரட்டை வாக்குரிமை தொடர்பாகவும், உறுப்பினர் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் எமக்கு பாரிய முரண்பாடுகள் இருக்கின்றன எனவும் தாங்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
