Monday, 29 June 2015

மொத்தமாக புதைப்பேன்…! மகிந்தவை சீண்டும் ரணில்!

Mr Raneil
முடிந்தால் எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்ச என்னுடன் மோதிப்பார்க்கட்டும். ஜனாதிபதி தேர்தலில் மோதினார்கள். ஓடஓட விரட்டினோம். இம்முறை ராஜபக்ச பற்றாலியன் மோதிப்பார்க்க வந்தால் வரட்டும். மொத்தமாக குழிதோண்டிப் புதைத்து விடுவோம். இப்படி சூளுரைத்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
மகிந்த ராஜபக்ச சுதந்திரக்கட்சி வேட்பாளராக களமிறங்குவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிறிது பின்வாங்குவதாக சில தகவல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், அவரை சீண்டி களமிறக்கும் புதிய முயற்சியோ இதுவென எண்ணத் தோன்றுகின்றது.
மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ள தேர்தல் தொகுதியில் நேற்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
நாங்கள் நல்லாட்சியொன்று பற்றி வாக்களித்திருந்தோம். ஜனவரி 8ல் வெற்றிபெற்று அதனை நடைமுறைப்படுத்தயும் காட்டினோம். எமது ஆட்சியில் வெள்ளைவான் இல்லை. எதனோல் காரர்கள் இல்லை. குடுக்காரர்கள், ஊழல்ப்பேர்வழிகள் இல்லை.
ராஜபக்ச மீண்டும் களமிறங்கப் போகிறாரா இல்லையா என்பதை எம்மால் கூற முடியாதுள்ளது. அவர் நேரடியாக என்னுடன் மோதிப்பார்க்கட்டும். நேரடி மோதலிற்கு வருவாரா? அல்லது வீட்டிற்குள் ஒளிந்திருக்கப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அவர் மீண்டும் கொண்டுவர துடிக்கும் ஆட்சியில் வெள்ளைவானிற்கு பொறுப்பான கபினட் அமைச்சர் யார்? குடுவிற்கு பொறுப்பான அமைச்சர் யார்? எதனோலிற்கு பொறுப்பான அமைச்சர் யார்? என்பதை இப்பொழுதே வெளிப்படுத்த வேண்டும்.
கடந்த முறை தேர்தலில் மகிந்த ராஜபக்ச பற்றாலியனை தோற்கடித்தோம். ஜனாதிபதி காலம் முடிவதற்கு இரண்டு வருடங்களின் முன்னரேயே தேர்தலிற்கு சென்றால் வெற்றிபெறலாமென சுமணதாசவின் கதையை நம்பி வந்தார்.
அவுஸ்திரேலிய செனற்சபையிலுள்ள எனது நண்பரொருவர் ஒருமுறை ஒரு ஆலோசனை சொன்னார். ஊவா மாகாணசபையை ஐ.தே.க வெற்றிகொண்டால், கட்சிகள் கூட்டுச்சேர்ந்து செயற்பட்டால் மகிந்தவை தோற்கடிப்பது சுலபமானதென்றார்.
முதலில் ஊவாவை வெற்றிகொண்டோம். ஜனவரி 8ல் மகிந்த பற்றாலியனை காலி செய்தோம்.
அவர் மீண்டும் மோதிப்பார்க்க வந்தால் மொத்தமாக குழிதோண்டி புதைப்போம்’ என்றார்.
Loading...