Monday, 1 June 2015

யுத்தக் குற்றவாளிகள் - யாரோ அவர் யாரோ ?

எஸ்.எம்.எம்.பஷீர்
“உண்மையில் வரலாறு என்பது  மனித குலத்தின்  குற்றங்ககளின் , அறிவீனங்ககளின்  ,  துரதிருஷ்டங்களின் பதிவேடு  என்பதைவிட சற்று அதிகமானது.”  எட்வர்ட் கிப்பன்  (Edward Gibbon)                                                                end war-1
இலங்கையில் முடிவுக்கு வந்த புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் பொழுது பொதுமக்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள் , சரணடைந்த  புலிகளும்  கொல்லப்பட்டிருக்கிறார்கள்  என்ற வகையில் இலங்கை அரசு யுத்தக் குற்றம் புரிந்திருக்கிறது என்றும் அதற்காக இலங்கை அரசின் ஆட்சியாளர்கள் ,  குறிப்பாக இலங்கை  அரசின் முன்னாள்  ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ச முப்படைகளின் தலைவர் என்ற  வகையிலும் , ஏனைய  படையணித் தலைவர்கள்  சரத் பொன்சேகா உட்பட இறுதி நேர யுத்தத்ததில் யுத்தத்தை  முன் நின்று நடத்திய சகலரும் சர்வதேச விசாரணைக்கு   உட்படுத்தப்பட  வேண்டும் என்பது புலிகளினதும் மற்றும் யுத்தத்தால்  பாதிக்கப்பட்ட   குடும்பங்களைச்  சேர்ந்தவர்களினதும் கோரிக்கையாகும்.  அத்தகைய  கோரிக்கைகள் முறைப்பாடுகளாக  ஏற்றுக்கொள்ளப்பட கால நிர்ணயம் செய்யப்பட்ட பொழுது , சமாதான காலம்  தொடங்கிய 2002 தொடக்கம் இலங்கையில்  எல்லா தரப்பினராலும் இழைக்கப்பட்ட மனித உரிமை  மீறல்களை (இறுதி யுத்தக் குற்றச்சாட்டுக்கள் உட்பட ) பாதிக்கப்பட்ட  சகல தரப்பினரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு முறையீடு செய்யும் உரிமை வழங்கப்பட்டது.
அத்தகைய முறைப்பாடுகள் இவ்வருடம்   செப்டெம்பர் மாதம்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  விசாரணை முடிவுகளாக வெளி வர உள்ளன என்பது யாவரும் அறிந்ததே. அவ் வேளையில்தான் சர்வதேச விசாரணைக்கான தேவை பற்றிய முடிவுகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான எதிபார்ப்பு ஏமாற்றமாகவும் இருக்கலாம். ஆனாலும் முன்னாள்  ஜனாதிபதி காலத்திலேயே பிரித்தானியாவில் உள்ள  சனல் நான்கு (Channel Four) தொலைக் காட்சி ஏற்படுத்திய இராணுவ  அத்துமீறல்கள் பற்றிய சலசலப்புக்கள் , ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அழுத்தங்கள்  என்பன காரணமாக காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு என நியமிக்கப்பட்ட மெக்ஸ் வெல் பரணகம தலைமையிலான விசாரணைக் குழுவின் பணிகளை, உள்ளக போர்க்குற்ற விசாரணையை முன்னெடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தி இருந்தார்.
அதன் மூலம் காணாமல்  போனோர் பற்றிய விசாரணைகளுக்கு அப்பால் இராணுவ அதிகாரிகளிடம் , அவர்களின்  மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்கள் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்பது   உறுதி செய்யப்பட்டது. அப்படியான விசாரணைகள் இப்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகிந்தவின் காலத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு இராணுவ உயர் அதிகாரிகளை விசாரிப்பதை துரிதப்படுத்தி எதிர்வரும் ஆகஸ்து மாதம் , அதாவது ஐக்கிய  நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் முடிவுகள்  வெளிவர முன்னரே உள்ளக போர்க்குற்ற விசாரணை முடிவுகளை வெளிக் கொண்டு  வருவதன் மூலம் ,  ஐக்கிய  நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் முடிவுகளுடன் சேர்ந்தே வரும் நீதிக்கான பரிந்துரைகளை பின்பற்ற  தங்களை  தயார்படுத்தி கொள்ள விழைகின்றன என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது ,   
இந்தப் பின்னணியில்  இன்றைய அரசியில் பீல்ட் மார்ஷல் பதவி வகிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா தனது  கட்டளையின் கீழ் கற்பழிப்போ சித்திரவதையோ பாரிய கொலைகளோ இடம்  பெறவில்லை என்றும் தான் , தனது குற்றமின்மையை நிரூபிக்க யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர்கொள்ளத் தயார் என்றும்  குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி  வந்தவுடன் நாடுகடந்த தமிழ் ஈழத்தின் பிரதமர் என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்கரான விஸ்வநாதன்  உருத்தரகுமார் அளவற்ற மகிழ்ச்சி கொண்டுள்ளதாக அறிக்கை இட்டுள்ளார். அதிலும் அவரின்  அமைச்சரவையில் உள்ள சர்வதேச விவகார அமைச்சர் பொன்சே்காவை தானாகவே முன் வந்து சாட்சியமளிக்க கூறி  உள்ளார்.  அத்தோடு சேர்த்து போரின் இறுதிக் காலத்தில் இன்றைய ஜனாதிபதி  சிரிசேனா   பிரதிப்   பாதுகாப்பு அமைச்சராக இருந்துள்ளார் என்றும்,  அப்பொழுது இடம்பெற்ற  கற்பழிப்புக்களுக்கும் , கொலைகளுக்கும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளை எதிர்கொண்டு பதில் சொல்லி தனது நிலையை தெளிவு படுத்த தயாரா என்றும்  கேள்வி தொடுத்துள்ளார்.

வட  மாகாண சபையில்  நிறைவேற்றப்பட்ட "இனப்படுகொலை"  தீர்மானத்திலும் இறுதி யுத்தத்தில் ஜனாதிபதி மைத்ரீபால சிறிசேனா பாதுகாப்பு அமைச்சராக மகிந்தவை பிரதியீடு செய்திருந்தார்  என்றும் சுட்டிக் காட்டி இருந்தனர். (This Council notes that President Maithripala Sirisena was acting defense minister in May 2009, during the peak of the government’s attacks against Tamils. This conclusively demonstrates the need for justice and accountability for the Tamil genocide to be driven and carried out by the international community. Tamils have no hope for justice in any domestic Sri Lankan mechanism, whether conducted by the Rajapaksa regime, Sirisena regime, or its successor.)
மொத்தத்தில் சிரிசேனா இறுதி யுத்தத்தில் நடந்ததாக  சொல்லப்படும் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்பதை மிக நாசூக்காகவேனும் தீர்மானம் சொல்லி இருக்கிறது. புலிகளின் நாடுகடந்த"பாராளுமன்றம்" கூட மைத்ரீபால சிரிசேனா  , தாமாக முன் வந்து தமது நிலையை விளக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை மிக இதமாகவே விடுத்துள்ளனர்.
எது எப்படியோ வடக்கு மாகாண  சபைத் தீர்மானம் புலிகளுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறையிடப்பட்ட குற்றங்களில் புலிகளின் குற்றங்களை தணிக்கும் வகையில் வரலாற்று ரீதியில்  தமிழ் மக்களுக்கு அநீதி இழக்கப்பட்டுள்ளது என்றும் அவை ஒரு திட்டமிட்ட "இனப்படுகொலை" என்றும்   ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  மனப்பாங்கில் முடிவுகளில் ஒரு பாரிய பாதிப்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட உபாயமுமாகும்.     
இதில் உள்ள சுவாரசியமான சங்கதிகள் என்னவென்றால்;
இலங்கை அரசு மட்டுமே யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றங்கள் புரிந்தவர்கள் என்று சுட்டு விரலை நீட்டி தங்களை நிரபராதிகளாக காட்டிக்  கொள்ள புலிகளோ அல்லது அவர்களின் முன்னாள் , இந்நாள் முகவர்களோ அல்லது உள்நாட்டு  புலிகளை அங்கீகரித்த (தமிழரே புலிகள் புலிகளே தமிழர் என்று ) தமிழ் தேசிய அரசியல்வாதிகளோ அல்லது  புலம் பெயர் தமிழ் தேசிய வாதிகளோ முயற்சிக்க முடியாது. ஏனெனில் புலிகள் இழைத்த   குற்றங்களில் பல,  மனித குலத்துக்கெதிரான குற்றங்களையும் யுத்தக் குற்றங்களையும் உள்ளடக்கி உள்ளன.  பல தசாப்தங்களாக புலிகளும் மனித குலத்துக்கு எதிரான  பல குற்றங்களை இழைத்து வந்துள்ளார்கள். அவை இன்றைய ஐக்கிய நாடுகளின் வரையறுக்கப்பட்ட மனித உரிமை விசாரணைக் காலத்தில் முழுமையாக அடங்காது என்றாலும் சமாதான காலம் தொடங்கி போரின் இறுதிக்காலம் வரையான காலப்பகுதியில் புலிகள் பொதுமக்கள் மீது  நடத்திய தாக்குதல்கள் , பலவந்தமாக மக்களை இடம்பெயரச் செய்தல், சிறுவர்களை போரில் இணைத்தல் (யுத்தக் குற்றம்) , என்பன மனிதகுலத்துக் கெதிரான குற்றங்களாகும். புலிகளின் சட்ட ஆலோசகராக பல வருடங்களாக பணியாற்றிய, சமாதானப் பேச்சுவார்த்தைகளில் பங்கு கொண்ட ருத்திரகுமாரும் புலிகள் இழைத்த குற்றங்களுக்காக   ஒரு மனச்சாட்சி உள்ள மனிதனாக இருந்தால் தானே சுயமாக முன்வந்து  செப்டெம்பரில் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை வெளியிடப்பட முன்னர் , அவர்களின் விசாரணைகளுக்கு  புலிகளின் சார்பில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கும்  , புலிகளின் யுத்த குற்றங்களுக்கும்  , பதில் சொல்ல முன் வர வேண்டும். ஏனெனில் இன்றுவரை அவர் புலிகளின் தலைமையை போற்றுவதுடன் ,புலிகளின் கோட்பாடுகளை முன்னெடுத்து செல்வதாக பகிரங்கமாக வெளிப்படுத்தி செயற்பட்டு வருபவர்.
இன்று ஆட்சியில் உள்ள ஜனாதிபதி சென்ற ஜனாதிபதி தேர்தலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மேலதிகமாக  கேள்வி பதில் வடிவத்தில் அமைந்த  ஒரு விளக்க  நூல்  ஒன்றை " மைத்ரீயின் சுக துக்கங்களும் , சந்தேகத்தைப் போக்குதலும் " என்ற பெயரில் வெளியிட்டிருந்தார். அந்த "விஞ்ஞாபன " விளக்க நூல் மைத்ரிபால  சிரிசேனாவின் நேர்காணலாக  சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டது. அந்த விஞ்ஞாபன விளக்க  நூலில் இறுதி யுத்த காலத்தில் ( ஜனாதிபதி நாட்டில் இல்லாத பொழுது வழக்கம்போல் ) பாதுகாப்புக்கு பொறுப்பாக தானே இருந்ததாகவும், அவ்வாறு தான் ஐந்து தடவைகள் இருந்துள்ளதாகவும்  "யுத்தம் முடிவுக்கு வந்துள்ளது "  (பிரபாகரன் கொல்லப்பட்டது , "சரணடைந்தோர் " கொல்லப்பட்டது உட்பட  )  என்ற செய்தி தனக்கே முதலில் அறிவிக்கப்பட்டது ".என்றும்  மைத்ரீ அந்த நூலில் யுத்த வெற்றிக்கு உரிமை கோரி இருந்தார். அப்படியானால் யுத்தம் முடிவுக்கு வந்த பொழுது அவரின் வகிபாகம் என்ன என்பது குறித்து புலம் பெயர்  நாடுகடந்த புலிகள் எழுப்பியுள்ள கேள்விக்கும் பதில் தேவைப்படும்.


இந்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி சிரிசேனாவும்   தனது மேற்குலக விஜயங்களின் பொழுது இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் பற்றி ஒரு பிரத்தியேக விசாரணை உள்நாட்டில் நடத்துவது பற்றி கூறியிருந்தார். அத்துடன் சென்ற வாரமும்  உள்ளக விசாரணை ஒன்றை இம்மாதத்திற்குள் ஆரம்பிப்பது என்று ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார் என்று அறிய முடிகிறது. அந்த விசாரணக் குழுவிற்கு  உள்நாட்டு நீதிபதிகளை  மட்டும் நியமிப்பதா அல்லது வெளிநாட்டு நீதிபதிகளையும் நியமிப்பதா என்று அரசு ஆராய்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்னுமொரு செய்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்து யுத்தநிறுத்த காலத்தில் கண்ணிவெடி விபத்தில் கொல்லப்பட்ட  அரியநாயகம் சந்திர நேருவின் மகன் , சந்திரகாந்தன் சந்திர நேரு யுத்தம் முடிந்த கையோடு அஞ்சாதவாசம் புரிந்து மீண்டும் இலங்கையின் சக்தி தொலைக்காட்சியில் எழுந்தருளி இருக்கிறார். அவர் இறுதி யுத்த காலங்களில் புலிகளுக்கும் அரசுக்கும் ஏனைய சர்வேதச நாடுகளுக்கும் இடையே தொடர்பாளர் ஆக பணியாற்றி புலிகளைக் காப்பற்ற அரும்பாடு பட்டவர் என்றும், தமிழ் மக்களை  இலங்கை இராணுவம்  அழிகிறார்கள் என்று மேற்குலக நாடுகளுக்கும்  இந்தியாவுக்கும் கூறிய பொழுதும் , அவர்கள் யாவரும் புலிகள் அழிக்கப்படுவதில்  அக்கறை காட்டினார்களே ஒழிய , மக்களைப் பாதுகாக்க அக்கறை காட்டவில்லை - மக்களைப் பாதுகாக்க தவறினார்கள் - என்று மேற்குலக , இந்திய தூதுவர்களையும்  அவர்களின் முகவர்களையும் இவர் குற்றம் சாட்டுகிறார். இவரைக் கொண்டுவந்து தொலைக்காட்சியில் "காட்சிப்  பொருளாக்கிய " தொலைக் காட்சி நிறுவனத்துக்கும் , சந்திரகாந்தன் சந்திர நேருவுக்கும் மற்றும் அவர்களின் வகையறாக்களுக்கும் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் என்னவென்றால் இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை தீவிரமாக முன்னெடுத்து இன்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு  சவாலாக ஒரு மாற்று அரசியல் அணியை உருவாக்குவதாகும்.

சந்திரகாந்தன் சந்திர நேருவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு தனது அவதானங்களையும் முன் வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இவர் நிச்சயமாக சர்வதேச நாடுகளை தொலைக்காட்சியில் சொல்வதுபோல் வெளிப்படையாக குற்றம் சாட்டியோ , புலிகளைக் குற்றம் சாட்டியோ தனது  அவதானிப்புக்களை முன் வைத்திருக்கமாட்டார் என நம்பலாம் .  மாறாக , ஆனால் நிச்சயமாக ராஜபக்ச குடும்பத்தினரை , இலங்கை இராணுவத்தை மட்டுமே  வெளிப்படையாக யுத்தக் குற்றங்களுக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் தனது அவதானங்களை முன் வைத்திருப்பார்.

இதுபோலவே , நோர்வேயின் சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹைம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிற்கு தனது தனிப்பட்ட உள்நோக்கினையும் சமர்ப்பித்துள்ளார். அவை செப்டெம்பரில் வெளியிடப்படும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின்  அறிக்கையில் "ஆச்சரியங்களை "  ஏற்படுத்தும் என்று வேறு ஒரு "எச்சரிக்கையை" கூட எரிக் விடுத்துள்ளார். ஆனால் எரிக் புலிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள் மிகவும் விரிவாக ஆராயப்பட வேண்டியவையாகும்.

புலிகளுடனான சமாதான ஒப்பந்த காலத்தின் பொழுது , மாவிலாறு நிகழ்வுகளுக்கு முன்பாக புலிகள் மாற்று கட்சியினர் , பொது மக்கள் (குறிப்பாக முஸ்லிம் மக்கள் ) மீது நடத்திய அடாவடித்தனங்கள் , அட்டூழியங்கள் என்பன பற்றிய முறைப்பாடுகள் நிச்சயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கும். மேலும் மாவிலாறின் பின்னர் புலிகளில் இருந்து பிரிந்த சென்ற கிழக்கு தமிழ் புலிகளை கொன்றமை  , யுத்தத்திலே இராணுவக் கட்டுப்பாட்டுப்  பிரதேசத்துக்கு தப்பிச் சென்ற பொது மக்களை கொன்றமை  , சிறுவர்களை பலவந்தமாக யுத்தத்தில் ஈடுபடுத்தியமை  , மக்களை பலவந்தமாக இடம் பெயரச் செய்தமை   யாவுமே யுத்த   மற்றும் பாரிய மனித உரிமை மீறல் குற்றங்களுக்குள் அடங்குகின்றன.

கிழக்கிலே புலிகள் கருணாவின் தலைமையில் பிரிந்த பொழுது சந்திரிக்கா அரசின் உதவி மூலம்  கிழக்கு யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை  மீறி புலிகளின் சொர்ணம் தலைமையில் கடல்வழியாக ஆயுதங்களைக் கொண்டு பயணித்த புலிகள் .செய்த கற்பழிப்புக்கள் கொலைகள் என்பனவும் யுத்தக் குற்றங்களே  ஆகும். சரணடைந்த கிழக்குப் புலிகளை வன்னிப் புலிகள் கொன்றனர். கருணா (முரளீதரன்) ,  சந்திரகாந்தன் ,  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ரணில் விக்ரமசிங்க,  ஸ்கண்டிநேவியன் சமாதான பணியாளர்கள் உட்பட ஒரு பரந்துபட்ட உள்ளக விசாரணை உண்மைகளை கண்டறிய உதவும்.
Loading...