பெட்டாலிங் ஜெயா, – முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தகுந்த சான்றுகளோடு பதிலளியுங்கள், மாறாக அனைத்தும் ரகசியம் எனக் கூறவேண்டாம் என மகாதீர் கூறினார். 1MDB விவகாரத்தில் அரசாங்கத்தின் முதலீட்டின் மீதான விமர்சனத்தில் தவறான கருத்து இருப்பதாக கூறியதற்கு துன் மகாதீர் இவ்வாறு பதிலளித்தார்.
தன்னுடைய செடிக் எனும் அகப்பக்கத்தில் துன் மகாதீர், ‘எனது அனைத்து விமர்சனங்களுக்கும் 1MDB தகுந்த ஆதாரங்களைக் காட்டவில்லை. மாறாக அனைத்தும் அரசாங்க ரகசியங்கள் என்று கூறுகின்றனர் என பதிவேற்றம் செய்திருந்தார்.
அதோடு, திரெங்கானு முதலீட்டு அதிகாரத்தின் ரிம5 பில்லியன் கடனுதவி திட்டம் பற்றிய அமைச்சரவை பத்திரங்கள் ஏன் இல்லை என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அப்பத்திரங்களை மக்கள் பார்க்க முன்வையுங்கள். ஆனால் அமைச்சரவை பத்திரங்கள் ரகசியமானவை என்று தான் கண்டிப்பாக கூறுவீர்கள்’ என மேலும் அவர் தெரிவித்தார்.
மேலும், வட்டியினைக் கட்ட பணத்தைக் கடன் வாங்குவது சுமையைக் குறைக்காது. மாறாக, அது கடனைத் தான் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, நிலத்தை 1MDBயிடம் விற்கையில் அரசாங்கத்தால் வருமானத்தைப் பார்க்கமுடியாது. அதே நேரத்தில் 1MDB அதே நிலத்தை விற்கையில் அரசாங்கத்திற்கு வரவேண்டிய வருமானம் கைமாறி அங்கே செல்லும் என துன் மகாதீர் தெரிவித்தார்.