முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ், முஸ்லிம் மக்கள் பழிவாங்கப்படுவார்கள். பழிவாங்கும் நோக்கத்தில் தான் மஹிந்த, கூட்டணி அமைக்கின்றார் என்று கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியும் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளருமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கடந்த ஆறு மாதங்களில் நாட்டில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் எவ்வித அச்சமும் இன்றி வாழ ஆரம்பித்துள்ளனர். ஊடகங்கள் சுயாதீனமாக இயங்க ஆரம்பித்துள்ளன. மதக் கலவரங்களோ அல்லது இன முரண்பாடுகளோ இந்த ஆறு மத காலத்தில் பதிவாகியதாக நான் அறியவில்லை. மக்கள் மிக நீண்ட நாட்களின் பின்னர் அமைதியாக வாழ்ந்து வரும் சூழல் உருவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் அதிகார ஆசையை காரணம் காட்டி மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திவிட வேண்டாம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கூட்டணி தமது சுகபோக வாழ்க்கையினை வாழ்வதற்காக நாட்டு மக்களை அடிமைகளாக நடத்தினர். மதவாதத்தையும், இன முரண்பாடுகளையும் தோற்றுவித்தனர். கடந்த முப்பது வருடங்களாக இந்த நாடு எவ்வாறான சூழ்நிலைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டதோ அதே நிலைமை கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நிலவியது.
வெறுமனே போர் வெற்றியை மாத்திரம் வைத்து சிங்கள இன வாக்குகளில் வாழலாம் என மஹிந்த நினைத்தன் காரணத்தினால் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார். இந்த ஆறுமாத காலத்தில் யாருடைய தனிப்பட தேவைக்காகவும் ஆட்சி நடைபெறவில்லை. முழுமையாக மக்களை இலக்கு வைத்தே ஆட்சி நடந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கான முயற்சிகளை உடனடியாக தடுத்து மக்கள் ஆட்சியை பலப்படுத்த வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரச தரப்பினர் மற்றும் ஏனைய கட்சி தலைவர்கள் என்னை சந்தித்து பேச்சுவார்த்தி நடத்தினர். இதன்போது எக்காரணத்தை கொண்டும் நாட்டில் மீண்டும் சர்வதிகார தலைமைத்துவத்தை உருவாக்க துணை நிக்கப் போவதில்லை என எனக்கு வாக்குக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் எனக்கு கொடுத்த வாக்குறுதியினை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியாக நம்புகின்றேன். எனவே மஹிந்தவின் பின்னால் ஒருசிலர் செயற்படுகின்றனர். மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்து அவர் மூலம் தமக்கான சுகபோக வாழ்க்கையினை அடைய நினைக்கும் எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியலில் இடம் கொடுக்கக் கூடாது.அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் எந்த சந்தர்ப்பத்திலும் வாய்ப்பு வழங்கக் கூடாது. இதை ஜனாதிபதி மக்களுக்காக செய்ய வேண்டும்.MN
மஹிந்த மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் மீண்டும் கட்சியின் உறுப்பினர்களை மட்டும் அல்லாது தன்னை தோற்கடித்த மக்களையும் சேர்த்தே பழிவாங்குவார். இதனால் அதிகளவில் தமிழ், முஸ்லிம் மக்களே பாதிக்கப்படுவார்கள். இப்போது மஹிந்த உருவாக்கும் கூட்டணியும் முழுமையாக பழிவாங்கல் அரசியலை செய்யவே முயற்சிக்கின்றது. ஆகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவற்றை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
|
Saturday, 4 July 2015
தமிழ், முஸ்லிம் மக்களைப் பழிவாங்கவே கூட்டணி அமைக்கிறார் மஹிந்த! - மாதுலுவாவே சோபித தேரர் எச்சரிக்கை |
Loading...