சுட்டெரிக்கும் வெயிலில் நீச்சல் குளத்துல ஆனந்தத்தோடு நீந்தி விளையாடி இருக்கிறீர்களா?அப்போ குளிச்சு முடிச்சு வெளிய வரும்போது கண்ணு செவந்து, அனலா எரிஞ்சிருக்குமே.அதுக்கு காரணம் குளோரின்தான்னு எல்லாரும் நினச்சுட்டு இருக்கோம். ஆனா உண்மையில அதுக்குகாரணம் குளோரின் இல்ல யூரின்.
அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. கொளுத்துற வெயிலுக்கு ஹாயா நீச்சலடிச்சுக்கிட்டே சில கருப்பு ஆடுகள் செய்யும் செயல்தான் இதுக்கு காரணமாம்.
குளிப்பவருடைய உடம்பில் இருக்கும் வியர்வை மற்றும் சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்கள் குளோரினோடு சேரும்போது, கெமிக்கல் ரியாக்ஷன் ஏற்பட்டு குளோரோ அமைன் என்ற ஒரு விதமான வாயு வெளியாகிறது. இதனை நாம் சுவாசிக்கும்போது நம் கண் சிவந்து எரிச்சல் உண்டாகிறது. பொது வெளியில் இருக்கும் நீச்சல் குளங்களில் இதன் பாதிப்பு குறைவாக இருக்கும். ஏனெனில் காற்றோட்டத்தில் இந்த வாயு வெளியேற வாய்ப்புள்ளது. ஆனால் உள்விளையாட்டு நீச்சல் குளங்களில் அந்த வாயு வெளியேறாமல் அங்கேயே சுற்றிக் கொண்டு இருக்குமாம். இதனால் கண் எரிச்சல் இன்னமும் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. சில குளங்களில் குளிப்பதற்கு முன்னதாகவே குளோரின் வாடை அதிகமாக இருக்கும், அதற்கும் இதுதான் காரணமாம். இப்படிப்பட்ட சுகாதரமற்ற தண்ணீரில் குளிக்கும்போதும், நீரை விழுங்கும்போதும் உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.
எப்படி தடுக்கலாம்?
உடல் நலத்தை கவனியுங்கள்
குளிப்பதற்கு முன் உங்கள் உடல் நிலையை கவனியுங்கள். உடல் நிலை சற்று சரியில்லாமல் இருந்தால், குளிப்பதை தவிர்ப்பது நல்லது. சமீபத்தில் நோயில் இருந்து மீண்டு வந்திருந்தாலும் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இது போன்ற சமயங்களில் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் அதிகம் இருக்கும். அதோடு பொது இடத்தில் குளிப்பது குளத்தில் நீந்தும் அனைவருக்கும் பாதிப்பை உருவாக்கும்.
ஷவர் பாத் எடுங்கள்
பெரும்பாலும் அனைத்து நீச்சல் குளத்திலும் ஷவர் பாத் வசதியும், கழிவறை வசதியும் ஏற்படுத்தப் பட்டிருக்கும். குளத்தில் இறங்குவதற்கு முன் ஒரு ஷவர் எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள வியர்வைக் கிருமிகள் நீங்கி உடல் சுத்தமாகும். பின்னர் குளிக்கலாம்.அதேபோல் முடிந்த பிறகும் ஷவர் பாத் செய்வது நல்லது.
குளோரின் டெஸ்ட்
நீரில் குளோரினின் அளவை அவ்வப்போது பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அதிகபட்சமாக3ppm அளவு குளோரின் இருக்கலாம். சரியான இடைவேளையில் மறுசுழற்சி முறையில் சுத்தம் செய்வது அவசியம்.
யார் அந்த கருப்பு ஆடு?
தண்ணியோடு தண்ணியா அடிச்சுவிட்டா தெரியாதுங்குற ஒரே காரணத்துக்காக இந்த விஷம வேலையை செய்யும் அந்த கருப்பு ஆடுகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்துல கேஸா போட முடியும். அவங்க அவங்க தன் ஒழுக்கத்தோடு செயல்பட்டு சுகாதாரம் காப்பது ஒண்ணுதான் வழி.
-ரெ.சு.வெங்கடேஷ்
