தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினருக்கு இடையிலான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது நூறு வீதம் உண்மை என முன்னாள் போராளியும், அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முக்கிய இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரபாகரன் எப்படி உயிருடன் பிடிக்கப்பட்டார் என்பதை நான் அறிந்திருக்கவில்லை. ஆனால், அவர் உயிருடன் பிடிக்கப்பட்டது தெரியும்.
பிரபாகரன் கொல்லப்பட்ட பின்பு, அவரது சடலத்தை அடையாளம் காட்ட என்னை அழைத்துச் சென்றபோதே, அவர் மிகுந்த சித்திரவதைக்குட்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
பிரபாகரன் கொல்லப்பட்டதை சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட்ட சில முக்கியஸ்தர்கள் அறிவார்கள்.
ஆனாலும் ‘இது எப்படி சாத்தியம்?’ என என்னிடம் வினவியபோது…சிரிப்புத்தான் வந்தது.
ஆனாலும், பிரபாகரனின் சடலத்தைக் கண்ணுற்ற தறுவாயில் எனக்குள் கவலையும், ஆத்திரமும் பீறிட்டுக் கிளம்பியதை நான் உணர்ந்தேன்.
பிரபாகரனின் உடலை அடையாளம் காட்டிவிட்டு வந்த இரண்டு நாட்களின் பிற்பாடு, பிரபாகரன் உயிருடன் பிடிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ஷவிடம் அழைத்து வரப்பட்டதாகவும், மஹிந்த பிரபாகரனை கடுமையாகத் தாக்கியதாகவும் முக்கிய சிங்கள அரசியல்வாதிகள் இருவர் என்னிடம் சொல்லக் கேட்டேன்.
இது தொடர்பில் நான் ஒருபோது மஹிந்தவிடம் வினவியபோது, அவர் சிரித்துக் கொண்டே பேச்சை மாற்றுவதற்கு முற்பட்டார். அதன் பிறகு, மஹிந்தவிடம் இதுபற்றி நான் எதுவும் கேட்கவில்லை.
இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன், அவரது மனைவி மற்றும் மகளை உயிரோடு இராணுவத்தினரிடம் ஒப்படைத்தது மடத்தனமான செயல்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் அவர் தன் மனைவி, மகளை அவருடன் வைத்திருக்கும் வாய்ப்பில்லை என்பதையும் நான் யூகித்திருந்தேன்.
மட்டுமன்றி, இறுதி யுத்தத்தில் புலிகளின் முக்கியஸ்தர்கள் இராணுவத்திடம் சரணடைந்தபோதும், அவர்களை இராணுவம் நாய்களைச் சுடுவதுபோல சுட்டுக் கொன்றதாக அறியக் கிடைத்தபோதும் எனக்கு கடும் கோபம் வந்தது.
என்னை துரோகி என்று விமர்சித்து வந்த இவர்கள் ஏன் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்?
எப்படியானபோதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதில், தமிழ் மக்கள் தற்போது சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் கருணா மேலும் தெரிவித்துள்ளார்.
