தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை வரை விரிவாக்கும் திட்டத்துக்கு சிறிலங்காவின் துற்போதைய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது குறித்து சீனா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சீனத் தூதுவர் யி ஜியாங்லியாங்கும் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர்களுக்கு சீனத் தூதரகப் பேச்சாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
90 கி.மீ நீளமான இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தில் சீன எக்சிம் வங்கி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன் மூலம் 15 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைப்பதுடன் பயண நேரமும், 3 மணித்தியாலங்களில் இருந்து 40 நிமிடங்களாக் குறையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டம் மூன்றரை ஆண்டுகளில் நிறைவடையும். இந்த திட்டத்துக்கு 2 வீத வட்டியுடன், 1.7 பில்லியன் டொலரை சீன எக்சிம் வங்கி வழங்கவுள்ளது.
இந்தக் கடனை 20 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையை மதிப்பதாகவும், இது சீனாவுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.